பொய் தகவல், ஆள் பிடிக்கும் வேலை.. அமைச்சர் கணேசனை விமர்சித்த அதிமுக எம்.எல்.ஏ...!
கடலூர்: 7 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்து விட்டதாக பொய்யான தகவல் பரப்பும் திமுக அமைச்சர் கணேசனுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், ஆள் பிடிக்கும் வேலையில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர் என கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனிகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழி தேவன் கூறியுள்ளார்.
Recommended Video
கடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதிமுகவில் இருந்து விலகி நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு அதிமுக கவுன்சிலர்கள் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்ததாக தகவல் வெளியானது. இதனை அமைச்சர் கணேசனும், நல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மனோகரனும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

திமுகவினரின் ஆள் பிடிக்கும் வேலை
7 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்து விட்டதாக பொய்யான தகவல் பரப்பும் திமுக அமைச்சர் கணேசனுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், ஆள் பிடிக்கும் வேலையில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர் என கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனிகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழி தேவன் கூறியுள்ளார். இதுகுறித்து விருத்தாச்சலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட அதிமுக கவுன்சிலர்கள் 7 பேர், திமுகவில் இணைந்து விட்டதாக திமுக அமைச்சர் கணேசன் கூறுவது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகக் கூறினார்.

அமைச்சர் கணேசனுக்கு கண்டனம்
நல்லூர் ஒன்றியத்தில், அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் 7 பேர் என்றும், அதில் 6 பேர் தங்களிடம் உள்ள நிலையில் பேட்டி கொடுத்த ஒருவர் மட்டுமே பணத்துக்கும் பதவிக்கும் திமுகவில் சேர்துள்ள நிலையில், அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்து விட்டதாக திமுக அமைச்சர் பொய்யான தகவலை பரப்பி வருவகிறார் என்று குற்றம் சாட்டினார். அதேபோல் விருத்தாச்சலம் ஒன்றியத்தில் அதிமுக சேர்மனாக இருந்த நபர், ஒரு மாதத்திற்கு மேலாக, திமுக கொடி கட்டிய காரிலும், திமுக வேஷ்டியை கட்டிக்கொண்டு, திமுகவின் அமைச்சரின் காலடியில் கிடக்கிறார் என்றும், சுயேட்சையாக வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் இரண்டு பேர், பல மாதங்களுக்கு முன்பே, திமுகவில் சேர்ந்த நிலையில், தற்போது அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் சேர்ந்து இருப்பதாக, ஊடகங்கள் முன்பு பொய்யான தகவலை, அமைச்சரே பரப்புவது மிகவும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.

அமைச்சரின் பொய் தகவல்
மேலும் நல்லூர் ஒன்றியத்தில் அதிமுக கூட்டணி உடன் இருந்த பாமக-வை சேர்ந்த சேர்மன் தற்போது வரை உள்ள நிலையில், விருத்தாச்சலம் மற்றும் நல்லூர் ஒன்றியங்களில் இனிமேல் திமுக சேர்மன்கள் இருப்பார்கள் என்று கூறியது அதிகார துஷ்பிரயோகம் என்று கூறிய அருண்மொழி தேவன், கடந்த 21.12.2021 ஆம் தேதி, அதிமுக விட்டு விலகிப் பல மாதங்கள் ஆகி போன, விருத்தாச்சலம் ஒன்றிய சேர்மன் செல்லதுரை மீது, திமுக உட்பட 14 ஒன்றிய கவுன்சிலர்கள், மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடிப்பதாக கூறி, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்திருந்த நிலையில், தற்போது மக்களின் நம்பிக்கையை இழந்த விருத்தாச்சலம் ஒன்றிய சேர்மன் செல்லதுரை, தமிழக முதல்வர் முன்னிலையில், திமுகவில் இணைந்திருப்பது அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உடன் இருந்த அதிமுக கவுன்சிலர்கள்
தற்போது ஆளுகின்ற அரசின் மீது நம்பிக்கை இழந்த மக்கள், கொரோனா வைரஸ் தொற்று, மழை பாதிப்பு என பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல், ஆள் பிடிக்கும் வேலையில் திமுக இறங்கி இருப்பது வருந்தத்தக்கது என கூறினார். பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது திமுகவில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் கூறிய நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அதிமுக கவுன்சிலர்களான பச்சமுத்து, ராஜலட்சுமி ராஜேந்திரன், முத்து, ஜான்சிமேரி, பத்மாவதி, வள்ளிசந்திரசேகர் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழக கட்சியின் கவுன்சிலர் ராஜா உட்பட 7 பேர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications