என் மீதான கொலைப் புகார் ஆதாரமற்றது... சட்டத்தின் முன் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் -திமுக MP ரமேஷ்
கடலூர்: முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.
அவ்வாறு சரணடைந்திருக்கும் அவர், தன் மீதான கொலைக்குற்றச்சாட்டு குறித்து முதல்முறையாக மவுனம் கலைத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், சட்டத்தின் முன் நிரபராதி என்பதை நிரூபித்துவிட்டு வெளியே வருவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தவறான பிரச்சாரம்
தனது முந்திரி ஆலையில் பணிபுரிந்த கோவிந்தராசு மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து, திமுக மீது சில அரசியல் கட்சிகள் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் அவ்வாறு செய்வது தனது மனதிற்கு நெருடலாகவும், இயக்கத்தின் தொண்டன் என்ற அடிப்படையில் வேதனையாகவும் இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.

வீண் பழி
மேலும், தன் உயிரினும் மேலாக போற்றும் ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியின் மீது வீண்பழி சுமத்தி வருபவர்கள் மேலும் இடம் கொடுக்க வேண்டாம் என்பதால், சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்துள்ள வழக்கில் தாம் நீதிமன்றத்தில் சரணடைவதாக கடலூர் திமுக எம்.பி.ரமேஷ் தெரிவித்திருக்கிறார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள கொலைப்புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து விட்டு வெளியே வருவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒரு மணி நேரம்
முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் போலீசுக்கு தண்ணீர் காட்டி வந்ததோடு, இது தொடர்பாக இது வரை வாய் திறக்கவும் மறுத்து வந்தார். இந்நிலையில் முதல்முறையாக தனது தரப்பு கருத்தை கடிதம் வாயிலாக நீதிமன்றத்தில் சரணடைவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வெளியிட்டிருக்கிறார்.

சட்ட நடவடிக்கை
கடலூர் திமுக எம்.பி. ரமேஷின் முந்திரி ஆலையில் பணியாற்றிய தொழிலாளி கோவிந்தராசு ரத்த காயங்களுடன் உயிரிழந்த விவகாரத்தை பொது வெளிக்கு கொண்டு வந்து குரல் கொடுத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. பாமகவை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த விவகாரத்தில் திமுக எம்.பி.க்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியது. இதனிடையே தவறு யார் செய்தாலும் தவறுதான் என்பதால், இந்த விவகாரத்தில் எவ்வித சமரசமும் இல்லாமல் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் கிரீன் சிக்னல் கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications