தவெக நிர்வாகியின் அசிங்கமான செயல்.. கண்சிவந்த விஜய்.. விவசாயிகளை மிரட்டி லஞ்சம்
கடலூர்: தவெக ஆட்சியை பிடித்து ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை விட, அறிவிக்கப்படாத சர்ச்சைகள்தான் அதிகம் வட்டமடிக்கிறது. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறினார். அதை தவெக நிர்வாகிகளே பின்பற்றுவதில்லை. கடலூரில் வண்டல் மண் எடுப்பதற்கு தவெக நிர்வாகி புலவேந்திரன் விவசாயிகளை மிரட்டி ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குற்றம் சாட்டப்பட்ட புலவேந்திரன் தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் ஏரி உள்ளது. அங்கு விவசாயிகளிடம் வண்டல் மண் எடுப்பதற்கு, தவெக நிர்வாகி புலவேந்திரன் என்பவர் ரூ.1 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவசாயிகள் தவெக நிர்வாகி புலவேந்திரனின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது.

தவெக நிர்வாகி லஞ்சம் கேட்டு மிரட்டல்
லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறினார். ஆனால் தவெக நிர்வாகிகள் அதற்கு நேர் எதிராக செயல்பட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தவெக நிர்வாகி புலவேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
தவெக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சீனுவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தவெக கடலூர் தெற்கு மாவட்ட இணைச் செயலாளராக செயல்பட்டு வந்த புலவேந்திரன் கட்சி தலைமையின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், தலைவரின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளார். அதனால் கட்சி தலைமை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒப்புதலுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம்.
கட்சியில் இருந்து நீக்கம்
புலவேந்திரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். எனவே தவெக கடலூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட, மாவட்ட சார்பு அணிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் யாரும் அவரிடம் கழகம் சார்ந்த எந்தவித தொடர்பும் கண்டிப்பாக வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications