தோனியின் வெறித்தன ரசிகருக்கு நேர்ந்த சோகம்.. தற்கொலை செய்து கொண்ட கோபி கிருஷ்ணன்.. அதிர்ச்சி!
கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவரின் மகன் கோபி கிருஷ்ணன். துபாயில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது ஊரில் வசித்து வருகிறார். கோபி கிருஷ்ணன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ் தோனியின் தீவிர ரசிகர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தோனி மீது உள்ள தீவிர பற்றால் தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்து தனது வீட்டு முகப்பில் தோனி படம் வரைந்து, 'Home of Dhoni fan' என்று எழுதி அசத்தினார். இதன் மூலம் தோனியின் வெறித்தன ரசிகராக அனைவராலும் கவனிக்கப்பட்டார். தனது வீட்டிற்கு தோனி வருகை தர வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் தீவிர தோனி ரசிகர் கோபிகிருஷ்ணன் இன்று உயிரிழந்துள்ளார். நேற்று இரவு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சிலர் கோபி கிருஷ்ணனை தாக்கியதாக தெரிகிறது. அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கோபிகிருஷ்ணன் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் தோனியின் வெறித்தனமான ரசிகரான கோபி கிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த கோபி கிருஷ்ணனுக்கு அன்பரசி என்ற மனைவியும் கிஷோர், சக்திவேல் என இரு ஆண் குழந்தைகளும் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications