இலவச வேட்டி எப்படி சபரிமலைக்கு சென்றது? ரூ.300க்கு இருமுடி பை.. பம்பையில் அதிர்ந்த கடலூர் பக்தர்
கடலூர்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து செல்லும் பக்தர்கள், இருமுடி கட்டி மலையேறுவது வழக்கம். இந்த இருமுடி கட்டுவதற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் பக்தர்கள் கவனம் செலுத்துவார்கள். ஆனால், தமிழக அரசு இலவசமாக வழங்கும் வேட்டியை வைத்து தயாரிக்கப்பட்ட இருமுடி பை, சபரிமலையில் ரூ.300-க்கு விற்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது... என்ன நடந்தது?
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு ஆடைகள் கிடைப்பதுடன், நெசவாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

விலையில்லா வேட்டி, சேலை
அரசு வழங்கும் இலவச வேட்டியை பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், அந்த வேட்டியை வேறு பொருளாக மாற்றி விற்பனை செய்வது தொடர்பான செய்தி இப்போது பேசுபொருளாகியுள்ளது.
சபரிமலையில் தமிழக அரசு இலவசமாக வழங்கிய வேட்டியில் தயாரிக்கப்பட்ட இருமுடி பை ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசின் தேவசம் போர்டு சார்பில் நடத்தப்படும் கடையில் இந்த பை விற்பனை செய்யப்படுவதை பார்த்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இருமுடி தேங்காய், நெய்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து செல்லும் பக்தர்கள், இருமுடி கட்டி மலையேறுவது வழக்கம். இருமுடியில் நெய் தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து பாரம்பரிய முறைப்படி சுமந்து செல்வார்கள். இதற்காக பம்பை உள்ளிட்ட பகுதிகளில் இருமுடி கட்டுவதற்கான பைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் நவநீதகிருஷ்ணன், சபரிமலைக்கு மாலை அணிந்து யாத்திரை சென்றிருந்தார். அப்போது சபரிமலை செல்லும் வழியில் பம்பையில் கேரள அரசின் தேவசம் போர்டு சார்பில் நடத்தப்படும் கடையில் இருமுடி கட்டுவதற்கான பைகளை வாங்கிப் பார்த்துள்ளார். அந்தப் பைகள் தமிழக அரசு பொங்கல் 2025 தொகுப்புடன் இலவசமாக வழங்கிய வேட்டியில் தயாரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடலூர் நவநீதகிருஷ்ணன்
அந்த வேட்டியில் தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய "பொங்கல் 2025 - அரசு வேட்டி" என்ற அடையாளமும் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், "வேட்டி, சேலை வழங்கும் திட்டம், பதிவு எண், ரகம், தொகுப்பு எண், முகமை - தமிழ்நாடு பஞ்சாலைக்கழகம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு இலவசமாக வழங்கிய வேட்டியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இருமுடி பை, அங்கு ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்த கடை ஊழியர்களிடம் நவநீதகிருஷ்ணன் இதுகுறித்து கேட்டிருக்கிறார். அதற்கு தங்களுக்கு எதுவும் தெரியாது என்று ஊழியர்கள் சொல்லிவிட்டார்களாம்.. தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கிய வேட்டிகள் எப்படி கேரள அரசின் தேவசம் போர்டு கடைக்கு விற்பனைக்கு வந்தன என்ற கேள்விதான் இப்போது எழுந்துள்ளது.
இலவச வேட்டி - ரூ.300க்கு விற்பனை?
அரசு வழங்கும் இலவச வேட்டிகளை பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், அந்த வேட்டியை பயன்படுத்தி இருமுடி பை தயாரித்து விற்பனை செய்திருப்பது பலருக்கும் குழப்பத்தையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது.
இலவச வேட்டிகள் மொத்தமாக விற்கப்பட்டனவா அல்லது வேறு வழியில் இந்தக் கடைக்கு வந்தனவா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழக அரசு வழங்கிய இலவச வேட்டிகள் எப்படி விற்பனைக்கு வந்தன என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...!!


Click it and Unblock the Notifications
