அப்பா வாங்கிய கார் அம்பாசடர்... அது தான் ராசி... எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் செண்டிமெண்ட்..!
கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செண்டிமெண்டாக தனது அப்பா வாங்கிய அம்பாசிடர் காரில் சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.
கடலூர் மாவட்டத்தில் திமுகவை வளர்த்த முன்னோடிகளில் ஒருவர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. கட்சியினராலும், அம்மாவட்ட மக்களாலும் எம்.ஆர்.கே. என அழைக்கப்பட்ட எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி 1988-ம் ஆண்டு வண்டி எண் TAF 1333 என்ற பதிவு எண் கொண்ட அம்பாசிடர் காரை வாங்கியிருக்கிறார்.

32 ஆண்டுகள் கழித்தும் அந்த அம்பாசிடர் காரை இன்றளவும் குடும்ப செண்டிமெண்ட்டாக வைத்து பயன்படுத்தி வருகிறார்கள் அவரது குடும்பத்தினர். அதிலும் குறிப்பாக எம்.ஆர்.கே.வின் மகனும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஒவ்வொரு தேர்தலின் போதும் தனது அப்பா வாங்கிய அம்பாசிடர் காரில் பயணித்து தான் வேட்பு மனுத் தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கியுள்ள அவர், இன்று நண்பகல் 12.15 மணிக்கு குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். வழக்கமாக அவர் பயன்படுத்தி வரும் டொயோட்டோ பார்ச்சூனர் காரை தவிர்த்து எளிமையாக அதே சமயத்தில் செண்டிமெண்டாக அம்பாசிடர் காரில் அவர் வந்திறங்கியது உள்ளூர் திமுகவினர் ஆச்சரியப்பட வைத்தது.

இதனிடையே எம்.ஆர்.கே. இல்ல சுபநிகழ்ச்சிகள் அனைத்திலும் வண்டி எண் TAF 1333 என்ற பதிவு எண் கொண்ட அம்பாசிடர் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் இதனால் காரில் சிறு பழுது ஏற்பட்டால் கூட அதை உடனடியாக சரிசெய்து முறையாக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பராமரித்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications