காட்டுமன்னார் கோவில் முகமது அப்சர் வீட்டில் ஆச்சரியம்! பூரித்து போய் ஒன்றுகூடிய மக்கள்!
கடலூர்: காட்டுமன்னார்கோவில் பகுதியில் வசித்து வரும் முகமது அப்சர் என்பவர் வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, நடராஜர் சிலை கிடைத்திருக்கிறது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த சிலைக்கு பூஜை செய்திருக்கின்றனர்.
அப்சர், சிலையை வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறார். அவர்கள் சிலை எவ்வளவு தொன்மையானது என்பது பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள கொல்லிமலை கீழ் பாதி கிராமத்தில் அப்சர் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. எனவே சிறு சிறு வேலைகள் பார்த்து அதில் வரும் வருமானத்தை குருவி சேர்ப்பதை போல சேர்த்து வீடு கட்ட ரெடியாகியிருக்கிறார். இதற்காக இடம் ஏற்கெனவே இவர் பெயரில் இருந்திருக்கிறது. நல்ல நாள் பார்த்து வீட்டு வேலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. முதற்கட்டமாக அஸ்திவாரம் போடப்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக அஸ்திவாரத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு வந்திருக்கிறது. இப்படி இருக்கையில்தான் இன்று பள்ளம் தோண்டும்போது உலோக சத்தம் கேட்டிருக்கிறது. இதனையடுத்து பொருட்களை கொண்டு பள்ளம் தோண்டாமல், உலோகம் இருக்கும் இடத்தை மட்டும் கையால் மண்ணை அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது அந்த அதிசயம் நடந்திருக்கிறது. அதாவது, அப்சரின் நிலத்திலிருந்து நடராஜர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
சிலையை பணியாளர்கள் பத்திரமாக வெளியில் எடுத்திருக்கிறார்கள். இருப்பினும் சிலையின் வலது கை பக்கம் உடைந்திருக்கிறது. சிலை கிடைத்த இடத்தில் பணியாளர்கள் மேலும் தோண்டி பார்த்தபோது உடைந்த பாகங்கள் இருந்திருக்கின்றன. சிலை சுமாராக 3 அடி வரை உயரம் இருந்திருக்கிறது. அத்துடன் சிதிலமடைந்த நிலையில் திருவாச்சி, அஸ்தி தேவர், ஓரடி உயரம் கொண்ட பிரதோஷ நந்தி வாகனமும் கிடைத்திருக்கிறது.
இதை பார்த்த அக்கம் பக்கம் மக்கள் பக்தி பரவசமடைந்தனர். உடனடியாக சிலையை கழுவி, பாலபிஷேகம் செய்து கும்பிட்டிருக்கிறார்கள். அப்சர் வருவாய் துறைக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்திருக்கிறார். அவர்கள் வந்து சிலையை மீட்டு சென்றிருக்கிறார்கள். இந்த சம்பவம் காட்டுமன்னார் கோயில் பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
வழக்கமாக வீடு கட்டும் பணிகளின்போது இதுபோன்று பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்படுவது இயல்புதான். ஆனால் உலோக சிலைகள் ஐம்பொன்னால் செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். இப்படி கிடைக்கும் சிலையை சிலர் மறைத்து அப்படியே கள்ள மார்க்கெட்டில் விற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால், அப்சர் நேர்மையாக சிலை ஒப்படைத்திருப்பது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றிருக்கிறது.
இதுபோன்று சிலை கிடைத்தால் உடனடியாக தாசில்தாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்கள் சிலையை கைப்பற்றி, அதை தொல்லியல் துறை வசம் ஒப்படைப்பார்கள். தொல்லியல் துறை சிலையின் பழமையை ஆய்வு செய்து அருங்காட்சியத்தில் வைக்கும். அதே நேரம் கைப்பற்றப்பட்ட சிலை மிக மிக முக்கியமானதாக இருப்பின், அந்த இடத்தை தொல்லியல் துறை ஆய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications