கடலூரில் பதற்றம்.. பாமக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
கடலூர்: கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியில் பாமக நிர்வாகி சிவசங்கருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் சிவசங்கர் வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காரணமாக கடலூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
கடலூரில் பாமக பிரமுகருக்க்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் கவலைக்கிடமான நிலையில் பாமக பிரமுகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யபட்ட சம்பவம் மொத்த தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.

இந்த சம்பவத்தில் 8 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இத்தகைய பரபரப்பான சூழலில், கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இது தொடர்பான விவரம் வருமாறு:-
கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வருபவர் பாமக நிர்வாகி சிவசங்கர். இவர் வன்னியர் சங்கத்தின் கடலூர் நகர தலைவராகவும் இருந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளது.
இதில் ரத்த வெள்ளத்தில் சிவசங்கர் சரிந்துள்ளார். கழுத்து, வாய், முதுகு பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளார். சிவசங்கரை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான முறையில் சிவசங்கர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவசங்ககரை வெட்டியது யார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடலூர் அரசு மருத்துவமனைக்கு அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications