சிதம்பரம் நடராஜர் கோவில் கணக்கில் அரசு தலையிடக் கூடாது! அது நல்லது அல்ல! சசிகலா எச்சரிக்கை!
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் கணக்கில் அரசு தலையிடக் கூடாது என்றும் அது நல்லது அல்ல எனவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை ரத்து செய்வது தான் திமுக அரசின் திராவிட மாடலா என அவர் வினவியுள்ளார்.
இதுநாள் வரை கோவில் கோவிலாக சுற்றிவந்த சசிகலா, இப்போது மக்கள் சந்திப்பு, பேட்டி என மெல்ல அதிரடி காட்டத் தொடங்கியுள்ளார்.

சசிகலா பயணம்
பெங்களூர் சிறையிலிருந்து விடுதலையாகிய பிறகு வீட்டில் ஒய்வு, ஆன்மிக சுற்றுப்பயணம் என சென்ற சசிகலா, இப்போது மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் சசிகலா, சிதம்பரம் நடராஜர் கோவில் கணக்கில் அரசு தலையிடக் கூடாது எனக் கூறி தீட்சிதர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் சசிகலா. சிதம்பரம் கோவில் கணக்கை அரசு கேட்பது நல்லதல்ல என அவர் எச்சரிக்கவும் செய்துள்ளார்.

தீட்சிதர்களுக்கு ஆதரவு
இதன் மூலம் அரசுக்கு தீட்சிதர்களின் சாபம் கிடைக்கும் என்பதைத் தான் இப்படி சூசகமாக சசிகலா தெரிவிக்கிறார் போல். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் வசமே இருப்பது தான் சிறந்தது என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தான் அவர்கள் கோவிலை நிர்வகித்து வருகிறார்கள் எனவும் சசிகலா ஆதரவு தெரிவித்துள்ளார். தீட்சிதர்களா? தமிழக அரசா? என நாள்தோறும் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் சசிகலாவின் இந்தக் கருத்து அரசியல் ரீதியாக முக்கியம் பெறுகிறது.

செவிலியர் விவகாரம்
கொரோனா காலத்தில் செவிலியர்களை தேவைக்கேற்க வேலை வாங்கிவிட்டு, இப்போது பணி நிரந்தரம் செய்ய முடியாது என தமிழக அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளதாக சசிகலா கூறினார். செவிலியர்கள் விவகாரத்தில் கணக்கு பார்க்காமல் பணி நிரந்தரம் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என அவர் அறிவுரை கூறினார்.

அதிமுக ஆட்சியில்
அதிமுக ஆட்சியிலேயே திராவிட மாடலை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு சமூகநீதி நிலைநிறுத்தபட்டது எனவும் சசிகலா தெரிவித்தார். அதிமுக பொதுக்குழு நெருங்கி வரும் நிலையில், டிடிவி தினகரன் ஒரு பக்கம், சசிகலா ஒரு பக்கம் சுற்றுப்பயணம் செய்து வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications