உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஹன்சிகா, எமி ஜாக்சன்.. தமிழ் நாயகிகளுக்கு தகுதியில்லையா? அண்ணாமலை கேள்வி!
கடலூர்: இந்தி எதிர்ப்பு பேசும் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், சினிமாவில் வடமாநில நாயகிகளுடன் மட்டுமே தொடர்ந்து நடிப்பது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதனை கண்டித்து திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சட்டமன்றத்திலும் இந்தி எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாகக் கூறி பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அண்ணாமலை பேச்சு
கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் 48 ஆயிரம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். இதற்கு தமிழக அரசு தலைகுனிய வேண்டும். தமிழ்நாட்டில் இந்தியை யாரும் திணிக்கவில்லை. அந்த வார்த்தையின் மூலம் ஆங்கிலத்தை திணிப்பதே திமுகவின் நோக்கம் என்று விமர்சித்தார்.

வெங்காய அரசாங்கம்
அதுமட்டுமல்லாமல், திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில் இந்தி இல்லை என்று மறுக்க முடியுமா? இந்தி விவகாரத்தில் திமுகவினரின் பேச்சிற்கும், செயல்பாடுகளுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. இந்தி எதிர்ப்பு என்பது காலிகள் சேர்ந்து நடத்தும் போராட்டம்.வெங்காய அரசாங்கம் என பெரியார் கூறினார்.

இந்தி எதிர்ப்பு போராட்டம்
இந்தி எதிர்ப்பு என்பது ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம். இந்த வார்த்தைகள் மேல் சந்தேகம் இருந்தால், இந்தி எதிர்ப்பு அன்றும் இன்றும் என்ற புத்தகத்தை படியுங்கள். இந்தி எதிர்ப்பு என்பது தேவையில்லை என சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பெண்களை பற்றி தவறாக பேசும் திண்டுக்கல் லியோனிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று விமர்சித்தார்.

வடமாநில நாயகிகள்
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரை அவருடன் நடித்த நடிகைகளில் தமிழ் நடிகைகள் யாருமே இல்லை. ஹன்சிகா மோத்வானி, அதிதி ராவ் ஹைதரி, எமி ஜாக்சன் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் இருந்து தான் உதயநிதி ஸ்டாலினின் நாயகிகள் கொண்டு வரப்படுகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின்
இதனை தவறாக சொல்லவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நாயகிக்கு கூட உங்களுடன் நடிக்க தகுதியில்லையா என்றும், அனைவரையும் வடமாநிலங்களில் இருந்து மட்டுமே அழைத்து வருவது ஏன், தமிழில் உள்ள நாயகிகளுடன் கூட நடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications