கடலூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொடும்பாவி எரிப்பு- காலணியால் அடித்த திமுக தொண்டர்கள்!
கடலூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து அவரது கொடும்பாவியை கடலூரில் திமுகவினர் இன்று எரித்தனர். அந்த கொடும்பாவியை காலணியாலும் திமுக தொண்டர்கள் அடித்து ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை உடனடியாக விசாரணை நடத்தி இறந்து போன முபின் குறித்த தகவலை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து முபின் கூட்டாளிகள் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக போலீசார் கோவை சம்பவத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக போலீசாரை பலரும் பாராட்டியும் வருகின்றனர். தற்போது இந்த சம்பவத்தை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தும் இருந்தார்.

அண்ணாமலையிடம் விசாரிக்கனும்
அதேநேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர். அத்துடன் விசாரணை நடைபெற்று வரும்போதே முபின் உள்ளிட்டோர் பற்றிய தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டும் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான நபர்கள் குறித்த தகவல்களை அண்ணாமலைக்கு முதலில் தெரிவித்தது யார்? அது தொடர்பாக அண்ணாமலையிடம் என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

அண்ணாமலை அநாகரீகம்
இந்நிலையில் கடலூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த கருத்துக்கு பதில் தர முடியாத அண்ணாமலை, பத்திரிகையாளர்களை குரங்கு என்றார். அத்துடன் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரை குறிப்பிடாமல், நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என ஒருமையில் இழிவாக விமர்சித்தார். அண்ணாமலையின் இந்த அநாகரீகப் பேச்சு பெரும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது. பத்திரிகையாளர்கள் அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அண்ணாமலை பேச்சு
கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று திமுகவை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடலூர் பகுதி கொள்ளை அடிக்கக் கூடிய கும்பலின் கூடாரமாக உள்ளது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னை கடலுக்குள் விடமாட்டேன் என்றார் மேலும் கடலூர் என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா கூறு போட்டு மக்களை கொத்தடிமையாக வைத்துள்ளீர்களா? ஒன்றும் புடுங்க முடியாது கடலூரில் எதுவும் செய்ய முடியாது பாரதிய ஜனதா கட்சி உள்ளே வந்துவிட்டது. என பேசினார்.

அண்ணாமலை கொடும்பாவி எரிப்பு
இந்நிலையில்வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து கடலூர் திமுக நகர செயலாளர் ராஜா தலைமையில் அண்ணாமலையின் உருவபொம்மையை தெருவில் திமுக தொண்டர்கள் இழுத்துச் சென்றனர். பின்னர் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து அண்ணாமலை உருவபொம்மையை தீயிட்டு எரித்தனர். அப்போது அண்ணாமலையின் உருவப் படம், உருவ பொம்மையை திமுகவினர் காலணியால் அடித்து ஆவேசத்தைக் காட்டினர். இதனால் கடலூரில் பரபரப்பு நிலவியது.

அண்ணாமலை கருத்து
இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், எனது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதற்கு பதிலாக கோவை சம்பவம் பற்றி இதுவரை வாய் திறக்காத முதல்வர் மு.க.ஸ்டாலினை பேச சொல்லுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications