உதயநிதியின் கோரிக்கைக்கு திருமாவளவன் ஆதரவு.. முதல்வர் விஜய்க்கு வைத்த வேண்டுகோள்
கடலூர்: திட்டங்களுக்குப் பெயர் மாற்றத்தினால் என்ன நடந்துவிடப் போகிறது? என்ற கேள்விக்கு ஒரு அரசு வைக்கிற பெயரை இன்னொரு அரசு மாற்றுவது என்பது அவ்வப்போது நிகழக்கூடிய ஒன்றுதான் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி மண்டல செயற்குழு கூட்டம் கடலூர் முதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், " இந்த மாநாட்டின் நோக்கம் பிறமொழி பேசும் தேசிய இனங்களுக்கு இடையிலான நல்லிணக்க உறவைப் பேணிப் பாதுகாப்பதும், ஒவ்வொரு மாநிலத்திற்குமான மாநில சுயாட்சி கோரிக்கையை மேலும் உரத்துப் பேசுவதற்குமான ஒரு முயற்சியாகும்.

அண்மைக்காலமாக தமிழ் தேசியம் என்பது பிறமொழி பேசுவோருக்கு எதிரான, பிற தேசிய இனத்திற்கு எதிரான ஒரு வெறுப்பு அரசியல் என்கிற அடிப்படையில் பிரிவினைவாதம் முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு வெறுப்பு அரசியலை இனத்தின் பெயரால் விதைக்கக் கூடாது என்கிற அடிப்படையில் தான் தேர்தலுக்கு முன்பே இந்த மாநாட்டை நடத்த நாங்கள் முடிவு செய்தோம். தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்தலுக்கு முன்னர் இம்மாநாட்டை நடத்த இயலவில்லை;
ஆகவே இப்போது தள்ளி வைத்து ஆகஸ்ட் 17 அன்று நடத்துகிறோம்.
திராவிட இயக்கங்கள் முன்மொழிந்த மாநில சுயாட்சியை இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசிய அரசியலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைக்கிறது. தனித் தமிழ்நாடு கோருவது தான் தமிழ் தேசியம் என்றில்லை; அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட மொழியுரிமை, இன உரிமை, மாநில உரிமைகள் ஆகியவற்றை வென்றெடுப்பதும், ஒரு தேசிய இனத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதும் தவிர்க்க முடியாத ஒரு தேவை. அதனையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ் தேசியமாகப் பார்க்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில அரசுகள் மாநில சுயாட்சிக்கான கோரிக்கையை எழுப்ப வேண்டும்; ஒவ்வொரு மாநிலத்திலும் மொழிவழி தேசியம் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இந்தியைப் பேசுகிற இந்தி தேசிய இனமும், பிற தேசிய இனங்களும் ஐக்கியமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அந்த ஒருங்கிணைவோடு கூடிய இந்திய ஒன்றிய அரசு ஒரு கூட்டாட்சி அரசாகம் அமைய வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்துகிறது. பல லட்சம் பேர் பங்கேற்கும் இந்த மாநாடு மாபெரும் வெற்றியைப் பெறும். தமிழக அரசியல் களத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலான அரசியல் களத்தில் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
நாளை 8-ம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. தற்போதைய சூழலில் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறை குறித்த சட்டம் தேவையில்லை; அதனை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கான கூட்டமாக முதலமைச்சர் தலைமையில் இது நடைபெறவிருக்கிறது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்க இருக்கிறோம்.
மேலும், இன்றைக்கு சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஒரு தனித் தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறார். மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் இந்திய ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்கிறது, அது கூடாது; தேவையான நிதியை, போதுமான நிதியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய இந்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தக்கூடிய அந்த தனித் தீர்மானத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது," என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த திருமாவளவன்,
"இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. இது முதல் பட்ஜெட். அடுத்தடுத்து வரக்கூடிய பட்ஜெட்டுகளில் நாம் எதிர்பார்க்கக்கூடிய பல அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் வரும். நிறைவேற்றுவோம் என்ற உறுதியைத் தந்திருக்கிறார்கள், கட்டாயம் நிறைவேற்றுவார்கள்.
திட்டங்களுக்குப் பெயர் மாற்றத்தினால் என்ன நடந்துவிடப் போகிறது? என்ற கேள்விக்கு ஒரு அரசு வைக்கிற பெயரை இன்னொரு அரசு மாற்றுவது என்பது அவ்வப்போது நிகழக்கூடிய ஒன்றுதான்.
காவிரி நீர் பிரச்சனை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மிகவும் முன்கூட்டியே சொன்ன இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. முதலமைச்சருக்கு அல்லது தமிழ்நாடு அரசுக்கு வேறு என்ன நோக்கம் இருக்கிறது அல்லது திட்டம் இருக்கிறது என்று தெரியாது. இப்போதும் சொல்கிறோம், காவிரி நீர் பிரச்சனை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது நல்லது.
தொகுதி மறுவரையறை சம்பந்தமாக நடைபெறும் கூட்டத்திற்கு திமுகவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. அழைப்பு விடுத்திருப்பது உண்மை என்றால், அதில் திமுக பங்கேற்பது அவசியமானது தான்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தான் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல்.. இது என்ன கேள்வி என கூறி எழுந்து சென்றார்.


Click it and Unblock the Notifications
