மீண்டும் மீண்டுமா? திருமாவளவனை பார்க்க முண்டியடித்து ஓடிய விசிகவினர்.. அடித்து விரட்டிய போலீசார்!
கடலூர்: ஏற்கனவே உளுந்தூர்பேட்டையில் தொல் திருமாவளவனை பேச விடாமல் விசிகவினர் முண்டியடித்த நிலையில் அதே போன்றதொரு சம்பவம் இன்று கடலூரில் நடந்துள்ளது. கடலூர் சிதம்பரத்தில் உள்ள கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்றபோது திருமாவளவனை உள்ளே செல்ல விடாதபடி விசிக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு உண்டானது. திருமாவளவன் கல்லூரி உள்ளே சென்ற போது விசிக தொண்டர்களும் உள்ளே புகுந்தனர்.
திருமாவளவன் கண்டித்தும் அவரது பேச்சை கேட்காமல் விசிகவினர் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயன்றனர். திருமாவளவன் பேச்சையும் கேட்காமல் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரையும் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றதால் பரபரப்பு உண்டானது. போலீசார் மற்றும் விசிகவினர் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

சுவர் ஏறி குதித்தும் உள்ளே புகுந்தனர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். திருமாவளவன் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், திருமாவளவன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வரும் தகவல் கிடைத்ததும் விசிகவினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் கல்லூரி முன்பு திரண்டனர். திருமாவளவன் வருகை தந்த போது, அவருடன் நூற்றுக்கணக்கானோர் கல்லூரிக்குள் நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றும், சுவர் ஏறி குதித்தும், கேட்டை தள்ளிக்கொண்டு உள்ளே புகுந்தனர். இதனால் சில போலீசார் கீழே விழுந்தனர். எனினும் ஒருவரை ஒருவர் தள்ளியபடி விசிக தொண்டர்கள் உள்ளே புகுந்தனர்.
திருமாவளவன் சொல்லியும் கேட்கவில்லை
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் கல்லூரிக்குள் ஓடியதால் அங்கு நெரிசல் ஏற்படும் சூழலும் ஏற்பட்டது. திருமாவளவன் கண்டித்தும் அவரது பேச்சை கேட்காமல் விசிகவினர் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயன்றனர். இதனால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு சூழல் ஏற்பட்டது. தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும். பட்டமளிப்பு விழாவுக்கு மட்டுமே நான் வந்துள்ளேன். பட்டமளிப்பு விழாவில் நானும் பட்டம் பெறுபவர்கள் மட்டுமே பங்கு பெற வேண்டும்.
பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கத்திற்குள் யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். கட்டுக்கடங்காமல் விசிகவினர் உள்ளே நுழைந்ததால் போலீசார் விசிகவினரை விரட்டி அடித்ததையும் பார்க்க முடிந்தது. திருமாவளவன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இது போல விசிகவினர் தொடர்ந்து ஆர்வமிகுதியில் முண்டியடிக்கும் நிகழ்வுகள் தொடர் கதையாகி வருவதை பார்க்க முடிகிறது.
ஏற்கனவே உளுந்தூர் பேட்டை மாநாட்டில்
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் உளுந்தூர் பேட்டையில் விசிக மாநாடு நடைபெற்ற்து. இந்த மாநாட்டில், திருமாவளவன் வந்த போது அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்துக்கொண்டு தொண்டர்கள் வந்தனர். பின்னர் கடும் கூட்டத்திற்கு மத்தியில் ஒருவழியாக மேடை ஏறி வந்த திருமாவளவன், பேச தொடங்கினார். அப்போதும், அவரை சுற்றிலும் கூட்டம் அலைமோதியது.
ஒரு கட்டத்தில் திருமாவளவனே நெரிசலுக்குள் சிக்கி கொள்ளும் அளவிற்கு கூட்டம் அலைமோதியது. சுற்றி இருப்பவர்களை திருமாவளவன் கடிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. கூட்டம் அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில், திருமாவளவன் சுருக்கமாக தனது உரையை முடித்துக்கொண்டு புறப்பட்டார். பாதியிலேயே பேச்சை முடித்து கொண்ட திருமாவளவன் கீழே இறங்க முற்பட்டபோது அவரும் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார்.
தொண்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க கோரிக்கை
கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் திருமாவளவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படும் சூழலும் ஏற்பட்டதாக விசிகவினர் மத்தியில் கூறப்பட்டது. திருமாவளவன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தொண்டர்கள் தொடர்ச்சியாக இப்படி நடந்து கொள்ளும் சூழலை பார்க்க முடியும் நிலையில், விசிகவினருக்கு திருமாவளவன் உரிய அறிவுறுத்தல் விடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறுவதை பார்க்க முடிகிறது. அதேபோல திருமாவளவன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இதுபோன்ற சூழலை தவிர்த்தால் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாது என்று அவர்கள் கூறினர்.


Click it and Unblock the Notifications
