மனைவி கண் எதிரில் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட டெல்லி கடற்படை அதிகாரி: கோவளம் கடலோரம் பிணமாக மீட்பு
மனைவி கண் எதிரில் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட டெல்லி கடற்படை அதிகாரி: கோவளம் கடலோரம் பிணமாக மீட்பு
டெல்லியில் பணியாற்றிய கடற்படை அதிகாரி குடும்பத்துடன் கோவளத்திற்கு சுற்றுலா வந்த நிலையில் குடும்பத்தினருடன் கடற்கரைக்கு வந்தவர் கடலில் நீந்திய நிலையில் பெரிய அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருநாள் தேடலுக்குப்பின் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

டெல்லி கடற்படை அதிகாரி
டெல்லியில் கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டராக பணியாற்றியவர் ஜே.ஆர்.சுரேஷ். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இவர் மனைவியின் சொந்த ஊர் சென்னை அடுத்த துரைப்பாக்கம் ஆகும். கடற்படையில் பணியாற்றிய சுரேஷ் இரண்டு நாட்களுக்கு முன் விடுமுறையில் குடும்பத்துடன் துரைப்பாக்கத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.

மனைவியின் ஊருக்கு சுற்றுலா
நேற்று தனது குடும்பத்தினருடன் கோவளம் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு கடற்கரை அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். மாலை 5 மணியளவில் சுரேஷ் தனது குடும்பத்தினரை கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். காற்றழுத்த தாழ்வு நிலையால் வானம் இருண்டு கடல் அலைகளும் ஆக்ரோஷமாக எழுந்துள்ளன.

அலையில் ஆர்வத்துடன் நீந்திய கடற்படை அதிகாரி
கப்பற்படை அதிகாரியான சுரேஷ் இயற்கையாக எழுந்த ஆர்வத்தில் கடலில் இறங்கி நீந்தியுள்ளார். ஆனால் கடலின் நிலைக்கருதி யாரும் கடலில் இறங்கக்கூடாது என எச்சரிக்கை இருந்தும் சுரேஷ் கடற்படையில் இருப்பதால் கடல் குறித்த பயமில்லாமல் நீந்தியுள்ளார். கடலில் சுரேஷ் மட்டும் தனியாக நீந்தியுள்ளார். கரையில் குடும்பத்தினர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அக்ரோஷத்துடன் எழுந்த கடல் அலை
கடலில் ஆக்ரோஷத்துடன் பெரிய அலைகள் வருவதைக் கவனித்த குடும்பத்தினர் சுரேஷை கரைக்கு திரும்பச் சொல்லி கேட்டுக்கொண்டுள்ளனர். சுரேஷும் கரைக்கு திரும்ப முற்பட்ட வேளையில் திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கினார். அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டதால் நீந்த முடியாமல் தவித்துள்ளார். இதைப்பார்த்து குடும்பத்தினர் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர். குடும்பத்தினர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கமிருந்த மீனவர்கள் கடலில் குதித்து சுரேஷை மீட்க முயன்றுள்ளனர்.

இரவு முழுவதும் தேடுதல் வேட்டை
ஆனால் சுரேஷை எங்கும் காணவில்லை, சுரேஷை விழுங்கிய கடல் வழக்கம் போல் அலைகளுடன் ஆர்பரித்துக்கொண்டிருந்தது. அப்போது மீனவர்களுடன் கடலோரக் காவல்படையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இரவு வரை தேடியும் சுரேஷை கண்டுபிடிக்க முடியவில்லை. கோவளத்தில் மழை பெய்து வருவதால் ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடியவில்லை.

பிணமாக உடல் மீட்பு
மீண்டும் அதிகாலையிலிருந்து கடற்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு அவரை தேடினர். தொடர் தேடுதலில் சுரேஷைக் கண்டுபிடித்தனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது உடல் கோவளத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள கடற்கரையின் ஓரத்திலிருந்து மீட்கப்பட்டது. அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதில் கடலில் மூழ்கி பிணமான நிலையில் அவரது உடலைத்தான் மீட்க முடிந்தது.

இயற்கையின் பேராற்றல்முன் மனித சக்தி எம்மாத்திரம்
மிகப்பெரிய கடற்படை அதிகாரி, கப்பலிலேயே வாழ்க்கை நடத்தியவர், கடலில் பல புயல்களை சந்தித்தவர் ஆயினும் இயற்கையின் அளவற்ற ஆற்றல் முன் மனிதர்கள் போராட முடியாது என்பதை சுரேஷின் மரணம் எடுத்துக்காட்டியுள்ளது. கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அலைகள் ஆக்ரோஷமாக எழுந்த நிலையில் அதை அலட்சியம் செய்து நீந்தியது ஒரு கப்பற்படையின் மதிப்புமிக்க உயிரை பறிக்கும் நிலைக்கு சென்றுள்ளது. உல்லாச சுற்றுலா கொடூரமான விபத்தாக சுரேஷின் குடும்பத்திற்கு மாறியுள்ளது மிக வேதனையான ஒன்று.












Click it and Unblock the Notifications