"பிரித்தாளும் சூழ்ச்சி! பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சி தருகிறது!" 13 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை
டெல்லி: மத ரீதியாகப் பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து அமைதி காக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
நாட்டில் சமீப காலமாக வெறுப்பு பேச்சுகளும் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான வன்முறையும் அதிகரித்து வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து சாடி வருகின்றனர்.
இந்நிலையில், வெறுப்பு பேச்சு தொடர்பாக நாட்டின் எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. மேலும், இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

13 கட்சிகள் கூட்டறிக்கை
மொத்தம் 13 கட்சிகள் இணைந்து இந்த கூட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளன. சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், சரத் பவார், மம்தா பானர்ஜி, ஹேமந்த் சோரன், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுமாறும், வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உணவு, உடை, மொழி
உணவு, உடை, நம்பிக்கை, பண்டிகை மொழியைப் பயன்படுத்தி ஒரு பிரிவினர் பிரச்சினையைத் தூண்டுகின்றனர் என்றும் நாட்டின் பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்புவாத வன்முறையைக் கண்டிக்கிறோம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் வெறுப்பு பேச்சைத் தூண்டுவோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது என்றும் எதிர்க்கட்சிகளின் அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மதவெறி
குறிப்பாக இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் மதவெறியைப் பிரசாரம் செய்பவர்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களுக்கு எதிராகப் பிரதமர் மோடி பேசத் தவறிவிட்டார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய ஆயுதமேந்திய கும்பல் அரசின் அனுகூலனைப் பெற்றது போன்ற ஆடம்பரத்தை அனுபவிக்கின்றன என்பதற்கு இந்த மௌனம் ஒரு தெளிவான சாட்சியமாகும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

அதிகபட்ச தண்டனை
மேலும் அதில், "நமது நாடு அதன் பல பன்முகத்தன்மைகளை முழுமையாக மதித்து, இடமளித்து, கொண்டாடினால் மட்டுமே அது செழிக்கும் என்பதை வலியுறுத்துகிறோம். நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். அவர்களுக்கு எதிராக அர்த்தமுள்ள மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை தர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்கம்
சமீபத்தில் பல்வேறு இடங்களில் நடந்த ராமநவமி ஊர்வலங்களின் போது வெறுப்புப் பேச்சுக்கள் தான் வகுப்புவாத வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் ஆயுதங்களாக இருந்துள்ளன. மேலும், வெறுப்பு பேச்சை பரப்ப சமூக வலைத்தளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவது கவலை அளிப்பதாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவை வளப்படுத்திய சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications