பாக்-இல் இருந்து ஊடுருவ காத்திருக்கும் 150 பயங்கரவாதிகள்! காஷ்மீர் எல்லையில் என்ன நடக்கிறது! பதற்றம்
டெல்லி: பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து ஊடுருவப் பயங்கரவாதிகள் தயாராக உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை விவகாரம் எப்போதும் சுமுகமாக இருந்தது இல்லை. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான அனைத்து எல்லைப் பகுதிகளும் பரபரப்பாகவே இருக்கும்!
அதிலும் குறிப்பாகக் காஷ்மீர் பகுதியில் இரு தரப்பிற்கும் இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்தியாவுக்கு ஊடுருவல் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும்.

ராணுவ வீரர்
இதனால் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளது. இதனிடையே காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவ சுமார் 150 பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி மேலும் 500 முதல் 700 பேர் அங்குள்ள 11 பயங்கரவாத முகாம்களில் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முறியடிப்பு
அதேநேரம் இதுவரை காஷ்மீரில் எல்லைப் பகுதியில் நடந்த அனைத்து ஊடுருவல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பயங்கரவாதிகளின் அனைத்து திட்டங்களும் முறியடிக்கப்பட்டது. அந்நிய மண்ணில் இருந்து மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஊடுருவல் முயற்சிகளும் தகர்க்கப்பட்டு உள்ளது.

மாற்று வழிகள்
எனவே, இப்போது பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்ட வழிகளைத் தவிர வேறு ஊடுருவல் வழிகளில் ஊடுருவ முயல்கின்றனர். இதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக எல்லைப் பகுதியில் ஊடுருவலே நடக்காது என நான் கூறவில்லை. காஷ்மீர் பகுதியில் எப்போதும் ஊடுருவல் நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் சமீப ஆண்டுகளாகத் தீவிர நடவடிக்கை காரணமாக ஊடுருவலைப் பெருமளவு குறைத்துள்ளோம்.

குறைந்து உள்ளது
இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவல் முயற்சி குறைந்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல் முயற்சி இந்தளவுக்குக் குறைந்ததே இல்லை. கடந்த 40-42 நாட்களில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைச் சுட்டு வீழ்த்தி உள்ளோம். பயங்கரவாதிகளில் மேலும் சிலர் நேபாளம் வழியாகவும் கூட உள்ளே நுழைய முயல்கின்றனர். இது தொடர்பான ரகசியத் தகவல்களும் எங்களுக்குக் கிடைத்து வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளோம்.
Recommended Video

நிரந்தர தீர்வு என்ன
இப்போதும் கூட பாகிஸ்தான் தரப்பில் இருந்து 150 பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர். எண்ணிக்கை மாறினாலும் கூட பயங்கரவாதிகள் எப்போதும் இப்படி தான் இருப்பார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் நிதி உதவி உள்ளிட்ட ஆதரவுகளை ஒடுக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே நிரந்தர தீர்வை தரும்" என்றார். இதையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications