ஆப்கனிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு.. வரிசையாக கொரோனா பாதிப்பு.. மத்திய அமைச்சருக்கும் கொரோனா?
டெல்லி: ஆப்கனில் இருந்து நேற்று இந்தியா அழைத்து வரப்பட்ட 78 பேரில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கன் தலைநகர் காபூலை பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் ஆப்கன் படைகள் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தொடங்கினர்.
அமெரிக்கா உட்பட யாரும் எதிர்பார்க்காத வகையில் வெறும் ஒரே சில வாரங்களில் ஒட்டுமொத்த ஆப்கனையே தாலிபான்கள் கைப்பற்றினர். அந்நாட்டின் அதிபராக இருந்த அஸ்ரப் கானி ஐக்கிய அமீரகத்திற்குத் தப்பிச் சென்றார்.

உச்சக்கட்ட குழப்பம்
அங்கு இப்போது உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. தலைநகரைக் கைப்பற்றி ஒரு வாரத்திற்கு மேலாகும் நிலையிலும் கூட, தாலிபான்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. மறுபுறம் அங்கிருக்கும் அமெரிக்கப் படைகள் அறிவித்தபடி ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வெளியேறவில்லை என்றால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தாலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

ஆபரேஷன் தேவி சக்தி
அங்கு உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள தங்கள் நாட்டுக் குடிமகன்களைத் தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியா சிறப்பு விமானங்கள் மூலம் தலைநகர் காபூலில் இருந்து பயணிகளை அழைத்து வருகிறது. ஆபரேஷன் தேவி சக்தி எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி 40 இந்தியர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டனர். அதன் பிறகு தொடர்ந்து பல நூறு பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

16 பேருக்கு கொரோனா
அதன்படி நேற்று 78 பேர் ஆப்கனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 16 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அறிகுறியை வெளிப்படுத்தாத asymptomatic நோயாளிகளாகவே இருந்தனர். இருப்பினும், 16 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயணம் செய்த 78 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
நேற்று இந்தியா அழைத்து வரப்பட்ட ஆப்கன் சீக்கியர்களை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உரையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அமைச்சருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து அமைச்சர் தரப்பில் எந்தவொரு அறிவிப்பும் இதுவரை இல்லை.

ஆப்கனில் தாலிபான்கள்
ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு 228 இந்தியர்கள் உட்பட மொத்தம் 626 பேர் இதுவரை இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 77 பேர் ஆப்கன் சீக்கியர்கள் என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். முன்னதாக இந்த மீட்புப் பணிகள் குறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "ஆப்கனில் இருந்து வெளியேற விரும்பும் அனைவருக்கும் உதவி செய்யப்படும். அதேநேரம் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்" என அறிவிக்கப்பட்டது. தாலிபான்கள் கைகளில் ஆப்கன் சென்ற பிறகு, பல ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications