சுந்தரா டிராவல்ஸ் பஸ் நினைவிருக்கா? டெல்லி ஆட்டோவை பாருங்க! நகரும் தோட்டத்தில் செல்ல பலர் ஆர்வம்
டெல்லி: முரளி, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் வரும் பேருந்தை போன்றே டெல்லியில் ஓடும் ஆட்டோ ஒன்று நகரும் தோட்டம் போல காட்சி தருகிறது.
நடிகர்கள் முரளி, வடிவேலு ஆகியோர் நகைச்சுவையில் பட்டையை கிளப்பிய திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ்.
பழைய பேருந்தை வைத்துக்கொண்டு இருவர் போடும் அலப்பறை மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து விடும்.

சுந்தரா டிராவல்ஸ் பேருந்து
அதில் ஒரு காட்சியில், நடிகர் போண்டா மணியின் திருமணத்துக்காக முரளியும், வடிவேலுவும் ஒரு பேருந்தை அலங்காரம் செய்திருப்பார்கள். பேருந்து முழுவதும் இலை, தளை, கொடிகளுடன் காடு போன்று அதன் அலங்காரம் இருக்கும். "என்ன ஒரு காடே நகர்ந்து வருது" என்று அந்த பேருந்தை பார்த்து ஒருவர் சொல்லும் அளவுக்கு அந்த பேருந்து இருக்கும். இந்த நகைச்சுவையை பார்த்தை யாரும் அவ்வளவு எளிதில் அதை மறந்திருக்க முடியாது.

டெல்லி ஆட்டோ
இதை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது டெல்லியில் ஓடும் ஒரு ஆட்டோ. எப்படி நமது தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக மஞ்சள் நிற ஆட்டோக்கள் உள்ளனவோ அதோபோல் பஞ்சை மஞ்சள் நிற ஆட்டோக்கள் டெல்லியின் அடையாளமாக உள்ளன. இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் ஓடும் டெல்லியில் தனது ஆட்டோவுக்கு மட்டும் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறார் மகிந்திர குமார் என்ற ஓட்டுநர்.

ஆட்டோ மேல் தோட்டம்
வீட்டு மொட்டை மாடியில் தோட்டங்கள் அமைத்து பார்த்திருப்போம். ஆனால், மகிந்திர குமார் தனது ஆட்டோவில் மொட்டை மாடி தோட்டம் அமைத்து உள்ளார். சுந்தரா டிராவல்ஸ் படத்தில் ஒரு காடே நகர்ந்து வருகிறது என்று சொல்லும் வசனம் மகிந்திர குமாரின் ஆட்டோவுக்கும் நச்சென பொருந்தும் அளவுக்கு அவரது ஆட்டோவின் மேல்பகுதி பச்சை பசேலென்ற செடிகளால் நிரம்பியுள்ளது.

20 செடிகள்
டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், அதிலிருந்து விடுபட தனக்கு இந்த யோசனை கிடைத்ததாக மகிர்ந்திர குமார் தெரிவித்து இருக்கிறார். ஆட்டோவின் மேல் பகுதியில் செடிகளை வளர்த்தால் பயணிகள் வெப்பத்திலிருந்து விடுபடலாம் என்ற யோசனையில் இதை செய்ததாக அவர் கூறியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தனது ஆட்டோவின் மேல் 20 வகையான செடிகளை அவர் வளர்த்து வருகிறார்.

இயற்கை ஏசி
இந்த செடிகளால் வெப்பம் குறைவாகவே இருப்பதாகவும், இயற்கையான ஏசி போல் இது செயல்படுவதாக கூறும் மகிந்திர குமார், பயணிகள் இதில் செல்ல விரும்புவதாக கூறுகிறார். தனது பயணிகளை மேலும் குளிர்விக்க ஆட்டோவுக்கு உள்ளேயும் பேன்களை அவர் பொறுத்தியுள்ளார். டெல்லியில் ஆட்டோவின் மீது நகர்ந்து வரும் தோட்டத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகவே பலர் இதில் செல்கின்றனர். நெட்டிசன்கள் பலர் இந்த ஆட்டோவில் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications