கார்கில் விஜய் திவாஸ் 2024: பிரதமர் மோடி நாளை திராஸ் போர் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்துகிறார்!
டெல்லி: கார்கில் வெற்றி தினத்தின் (கார்கில் விஜய் திவாஸ் 2024) வெள்ளி விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை கார்கில் செல்கிறார். கார்கில் திராஸில் போர் நினைவிடத்தில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார். பின்னர் கார்கில் திராஸ் எல்லைப் பகுதியில் தேசம் காக்கும் வீரர்களுடன் கலந்துரையாடி இனிப்புகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.
ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் முன்னெடுத்தது. ஆனால் கடும் குளிரிலும் கொட்டும் பனியிலும் பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்திய ராணுவ வீரர்கள் தீரத்தோடு எதிர்த்து போரிட்டு விரட்டியடித்தனர். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில் ஜூலை 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

கார்கில் செல்லும் மோடி: கார்கில் விஜய் திவாஸ் நிகழ்ச்சிகளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை கார்கில் செல்கிறார். கார்கில் திராஸில் போர் வீரர்கள் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்துகிறார் பிரதமர் மோடி. பின்னர் அங்கு எல்லையை பாதுகாக்கும் வீரர்களுடன் கலந்துரையாடி இனிப்புகளை வழங்குகிறார் பிரதமர் மோடி.
சுரங்கப் பாதை திட்டம்: மேலும் ஷின்குன் லா சுரங்கப்பாதைத் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கிவைப்பார். ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டம் 4.1 கி.மீ நீளமுள்ள இரட்டை-குழாய் சுரங்கப்பாதையைக் கொண்டுள்ளது, இது லே-க்கு அனைத்து பருவ காலத்திலும் இணைப்பை வழங்குவதற்காக நிமு - படும் - தர்ச்சா சாலையில் சுமார் 15,800 அடி உயரத்தில் கட்டப்படும். இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டால், இது உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையாக இருக்கும். ஷின்குன் லா சுரங்கப்பாதை நமது ஆயுதப் படைகள் மற்றும் தளவாடங்களின் விரைவான போக்குவரத்தை உறுதி செய்வதுடன் மட்டுமல்லாமல், லடாக்கில் பொருளாதார, சமூக வளர்ச்சியையும் வளர்க்கும்.
பிஷியானா விமான படை தளம்: முன்னதாக கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கார்கில் வெற்றி தினத்தின் வெள்ளி விழாவையொட்டி பிஷியானா விமானப்படை தளத்தில் இந்திய ஆயுதப்படைகளின் வீரத்தையும் தேச சேவையில் செய்த தியாகங்களையும் கௌரவிக்கும் வகையில் அண்மையில் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்திய விமானப்படையின் ஆபரேஷன் சஃபெத் சாகர், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் விஜய் ஆகியவற்றைத் தொடர்ந்து 1999-ம் ஆண்டில் கார்கில் போரில் இந்தியா பெற்ற வெற்றியின் 25 வது ஆண்டு நிறைவைக் குறிப்பதாக இந்தக் கொண்டாட்டம் அமைந்துள்ளது.
ராணுவ விமானப் போக்குவரத்து வரலாற்றில் இது உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இதில் அதிக உயரத்தில் உள்ள இலக்குகளுக்கு எதிராக விமான சக்தி வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. பிஷியானா விமானப்படை தளத்தை, தளமாகக் கொண்ட "கோல்டன் அம்புகள்" என்று அழைக்கப்படும் மிக் 21 வகை விமானங்களை இயக்கும் இந்திய விமானப் படையின் 17வது படைப்பிரிவு, கார்கில் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றது.
ஆபரேஷன் சஃபேத் சாகர்: எதிரி துருப்புகளை வெளியேற்ற பல உளவு, தாக்குதல் பணிகளை அது மேற்கொண்டது. இதற்காக, இந்த படைப்பிரிவுக்கு சிறப்பான சேவைக்காக மதிப்புமிக்க கௌரவம் வழங்கப்பட்டது. இந்த மதிப்புமிக்க பிரிவு ஆபரேஷன் சஃபேத் சாகரில் பங்கேற்ற விமானப்படை பிரிவுகளில் அதிகபட்ச கௌரவங்களையும் விருதுகளையும் வென்றுள்ளது.
நிகழ்ச்சி விவரம்: இது தொடர்பான வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஜூலை 20-ந் தேதி பிஷியானாவில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் நடைபெற்றது. மேற்கு விமான கட்டளையின் மூத்த அதிகாரி ஏர் மார்ஷல் பி.கே.வோஹ்ராவால் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பி.எஸ்.தனோவா (ஓய்வு), விமானப் படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆகாஷ் கங்கா ஸ்கை டைவிங் : ஆகாஷ் கங்கா ஸ்கை டைவிங் குழுவினரின் பாரா-டிராப், மூன்று ரஃபேல், மூன்று ஜாகுவார் போர் விமானங்களின் 'விக்' வடிவத்தில் ஃப்ளைபாஸ்ட், எம்ஐ -17 1 வி ஹெலிகாப்டர் மூலம் ஸ்லிதரிங், சுகோய் -30 எம்.கே.ஐ போர் விமானங்களின் குறைந்த நிலை ஏரோபாட்டிக்ஸ் ஆகியவை வான்வழி காட்சிகளும் நிகழ்ச்சியில் நடத்தப்பட்டன. விமானப்படை வீரர்களின் துணிச்சலான உணர்வு, துல்லியம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்திய இந்த வான்வழி காட்சியை பள்ளி குழந்தைகள் உட்பட 5000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
கார் பேரணி: முன்னதாக டெல்லி பகுதியின் தலைமை கமாண்டிங் அதிகாரியாக லெப்டினன்ட் ஜெனரல் பாவ்னிஷ் குமார் ஜூலை-ந் தேதி டெல்லி கன்டோன்மென்ட்டின் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் இருந்து கார்கில் போரில் இந்தியாவின் வெற்றியின் 25 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் 'துணிச்சல்மிக்க வீரர்களைப் போற்றுதல்' என்ற கார் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கார்கில் போரின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை நினைவுகூரும் வகையில் கார்கில் போர் வீரர்களின் துணிச்சல், நெகிழ்வு மற்றும் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 'துணிச்சல்மிக்க வீரர்களைப் போற்றுதல்' கார் பேரணி நடத்தப்படுகிறது. ஜூன் 30-ந் தேதியன்று டானோட் பார்டர் போஸ்ட், தேஸு மற்றும் கொச்சி துறைமுகத்திலிருந்து ஒரே நேரத்தில் கார் பேரணி கொடியசைத்து தொடங்கப்பட்டது.
கார்கிலில் கார் பேரணி: ஜூலை 9-ந் தேதி டெல்லியில் இணைந்த இந்தக் குழுக்கள், திராஸில் உள்ள கார்கில் போர் நினைவுச் சின்னத்தை நோக்கிச் செல்வதற்காக ஜூலை 11-ல் கொடியசைத்துத் தொடங்கிவைக்கப்பட்டன. இந்த பேரணி 10,000 கி.மீ தூரம் கடந்து ஜூலை 15-ந் தேதி கார்கில் போர் நினைவிடத்தை சென்றடைந்தது.












Click it and Unblock the Notifications