275 இந்தியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.. நேபாள வெள்ள சோகம்! மத்திய அரசு கவலை
டெல்லி: நேபாள வெள்ளத்தில் சிக்கியவர்களில் 275 இந்தியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என மத்திய அரசு கூறியிருக்கிறது. இதுவரை 166 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.
நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மேற்குறிப்பிட்ட தகவல்களை தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் கூறியதாவது, மாயமான இந்தியர்களை கண்டறியும் பணியில் இந்திய அரசு நேபாள அரசுடனும், இந்தியாவில் உள்ள சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடனும் மிக நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறது. நேபாள அதிகாரிகளின் இந்த தீவிரமான மீட்பு முயற்சிகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என கூறியுள்ளார்.
சீனா வழியாக திபெத்திய தன்னாட்சி பகுதிக்குள் நுழைந்த 1907 இந்தியர்கள் பத்திரமாக நேபாள எல்லையை கடந்து வந்தனர். தற்போது திபெத் பகுதியில் இந்தியர்கள் யாரும் சிக்கியிருக்கவில்லை என்பதை தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர். நேபாளத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்தியா தொடர்ந்து உதவிகளை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி அடுத்த சில நாட்களில் கூடுதல் தடயவியல் கருவிகள், தற்காலிக பெய்லி பாலங்கள் மற்றும் தேவையான பிற நிவாரண பொருட்கள் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. காணாமல் போன இந்தியர்களின் நிலை என்ன? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. காணாமல் போனவர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று இந்தியர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த வெள்ளம், நேபாளத்தை பொருளாதார ரீதியாக கடுமையாக பாதித்திருக்கிறது. ஏற்கெனவே நேபாளத்தில் பெரிய அளவுக்கு பொருளாதார வளர்ச்சிகள் ஏதும் இல்லை. இப்படி இருக்கையில் வெள்ள பாதிப்புகள், அந்நாட்டின் இன்னும் பின்னுக்கு இழுத்து சென்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications
