இந்தியாவில் 29 முதல்வர்கள் கோடீஸ்வரர்கள் -முதலிடம் இவரா? ஸ்டாலின் மதிப்பு? தனித்து நிற்கும் மம்தா
டெல்லி: இந்தியாவில் உள்ள 30 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள் ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்து உள்ளது. இதில் கோடிக்கணக்கில் இல்லாமல் சில லட்சங்களை மட்டுமே தனது உடமையாக வைத்து இருக்கும் முதலமைச்சர் ஒரே ஒருவர்தான். யார் அது? விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் உள்ள மொத்த 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் முதலமைச்சர்கள் உள்ளார்கள். இந்த 30 முதலமைச்சர்கள் சொத்து விபரங்களை அலசி ஆராய்ந்து அதிக சொத்துக்களை கொண்ட முதலமைச்சர்கள், குறைவான சொத்துக்களை வைத்து இருக்கும் முதலமைச்சர்களின் பட்டியலை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டு உள்ளது.

முதலிடம் யார்: ஆங்கிலத்தில் அசோசியேஷன் ஃபார் டெமாகிரடிக் ரீஃபார்ம்ஸ் (ADR) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு வெளியிட்டு இருக்கும் அறிக்கையின்படி, அதிக சொத்து வைத்து இருக்கும் முதலமைச்சர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது பெயரில் ரூ.510 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அருணாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் பேமா கண்டு. அவரது பெயரில் ரூ.163 கோடி மதிப்புடைய சொத்துக்கள் உள்ளதாக ஏடிஆர் அறிக்கை தெரிவித்து உள்ளது. பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோரூக்கு ரூ.3 கோடி மதிப்புடைய சொத்துக்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பினராயி, மம்தா பானர்ஜி: இந்த பட்டியலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் மனோகர் லால் கட்டர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கடைசி 3 இடத்தில் உள்ளனர். இதில் பினராயி விஜயனுக்கு ரூ.1.18 கோடி மற்றும் மனோகர் லால் கட்டருக்கு ரூ.1.27 கோடி மதிப்புடைய சொத்துக்கள் உள்ளன. 30 முதலமைச்சர்களின் பட்டியலில் கோடீஸ்வரர் இல்லாத ஒரே முதலமைச்சர் மம்தா பானர்ஜிதான். அவருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் மட்டுமே உள்ளதாக ஏடிஆர் கூறி உள்ளது.

ஸ்டாலின் சொத்து மதிப்பு: இந்த பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 14 வது இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.8.88 கோடி என்று கணக்கு காட்டப்பட்டு உள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.38.39 கோடி என கணக்கு காட்டப்பட்டு இருக்கிறது. தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவின் சொத்து மதிப்பு ரூ.23.55 எனவும், கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் சொத்து ரூ.8.92 எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications