தமிழகத்துக்கு 15 நாள் 4,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
டெல்லி: கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட காவிரி நீர் ஒழுங்காற்று குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா - தமிழ்நாடு இடையே காவிரி நீரை பங்கீட்டு செய்து கொள்வதில் பிரச்சனை உள்ளது. காவிரி தீர்ப்பாயம், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா உரிய முறையில் தண்ணீர் திறப்பது இல்லை. இந்நிலையில் தான் செப்டம்பர் மாதத்துக்கான தண்ணீரையும் கர்நாடகா தமிழகத்துக்கு வழங்கவில்லை.
இந்நிலையில் தான் இன்று டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை முதலில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு வழங்கும். அதனை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல்படுத்தும்.
அந்த வகையில் இன்று காலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடகா அரசு ஏற்கவில்லை. இதுதொடர்பாக கர்நாடகா அரசு சார்பில், ''தமிழகத்துக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க முடியாது. ஏனென்றால் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அணைகளில் தண்ணீர் குறைய தொடங்கி உள்ளது. அதேவேளையில் தமிழகத்துக்கு அதிக மழையை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால் 18 ஆயிரம் கனஅடியை திறக்க முடியாது'' என்று தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு கோரிக்கைகளையும் ஏற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு, ''தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு தலா 4 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும்'' என்று பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையானது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகா அணைகளில் உள்ள நீர் இருப்பு தொடர்பாகவும், தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீர் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்கள் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க அதிரடியாக உத்தரவிடப்பட்டது.


Click it and Unblock the Notifications
