பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி.. பலரது சேமிப்பு கணக்குகளில் பணம் கோடிகளில் மாயம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிரேட்டர் நொய்டா கிளையில் பெருமளவிலான நிதி முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் உண்மையான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று வங்கி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இதுவரை ரூ.43 லட்சம் மதிப்பிலான மூன்று வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மற்ற புகார்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு வங்கி நிர்வாகம் பதில் கூறியுள்ளது.

வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி தங்களது சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகளில் இருந்த பணம் காணாமல் போயுள்ளதாகப் பலர் புகார் தெரிவித்துள்ள நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Punjab National Bank Greater Noida bank

இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கணக்குகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் அளவைக் கண்டறிய புகார்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். வாடிக்கையாளர்களின் உண்மையான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று நாங்கள் உறுதி அளிக்கிறோம்.

மோசடி, நிதி முறைகேடுகள் மற்றும் தவறான செயல்பாடுகள் தொடர்பாகத் தாங்கள் எவ்வித சமரசமும் செய்துகொள்வதில்லைது. இந்தச் சம்பவத்தில் தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் , இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க உள்கட்டுப்பாட்டு நடைமுறைகளும் கண்காணிப்பு அமைப்புகளும் வலுப்படுத்தப்படும் " இவ்வாறு பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிரேட்டர் நொய்டா கிளையில் நடந்தது என்ன?

கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் சுமார் இரண்டு டஜன் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகளில் இருந்த பணம் காணாமல் போயுள்ளதாகப் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து ரூ.35 கோடி மோசடி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

வாடிக்கையாளர் ஸ்ரீசந்த் மற்றும் பிற கணக்குதாரர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத வங்கி ஊழியர்கள் மீது நம்பிக்கை மோசடி என்ற பிரிவான பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) 316(5)-வது பிரிவின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின்படி, 21 பேர் இழந்ததாகக் கூறப்படும் தொகை ரூ.11.24 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இவர்களில் இரண்டு வாடிக்கையாளர்கள் தலா ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், உள்ளூர் வாடிக்கையாளர்கள் இந்த மோசடியின் மொத்த மதிப்பு சுமார் ரூ.35 கோடியாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். சேமிப்புக் கணக்குகள், நிலையான வைப்புத்தொகைகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வாடிக்கையாளர்கள் கூறுவது என்ன?

கிரேட்டர் நொய்டாவின் சூரஜ்பூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீசந்த், தனது நிலையான வைப்புத்தொகையில் இருந்து ரூ.1.16 கோடி முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் தனது சேமிப்புக் கணக்கில் சுமார் ரூ.87 லட்சம் முதல் ரூ.88 லட்சம் வரை இருந்ததாகவும், தற்போது அந்தக் கணக்கில் வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே இருப்பதாகவும் பிஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். விவசாயியான அவருக்குச் சொந்தமான அந்தப் பணத்தில், ஓர் அரசு அமைப்பிடமிருந்து பெற்ற இழப்பீட்டுத் தொகையும் அடங்கியிருந்ததாகக் கூறியுள்ளார்.

தனது வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூ.39 லட்சம் காணாமல் போயுள்ளதாக ஹனீப் கான் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். எந்தப் பணப் பரிவர்த்தனை அறிவிப்போ அல்லது குறுஞ்செய்தியோ வராமல் தனது கணக்கிலிருந்து ரூ.9.5 லட்சம் காணாமல் போயுள்ளதாக மற்றொரு வாடிக்கையாளரான ஜாகிர் தெரிவித்துள்ளார்.

கௌதம் புத்த நகர் மாவட்டத்தின் மாவட்ட வங்கி மேலாளர் ராம் வினோத் குமார், வாடிக்கையாளர்களின் புகார்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களின் புகார்களுக்குத் தீர்வு காணப்படும் என்று வங்கி நிர்வாகம் உறுதியளித்துள்ளதாகக் காவல்துறையும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கிளை மேலாளர் உள்ளிட்ட பல ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


வங்கிக் கணக்கில் பணம் காணாமல் போனால் என்ன செய்ய வேண்டும்?

இந்தச் சம்பவம், வங்கிக் கணக்கில் அங்கீகரிக்கப்படாத பணப் பரிவர்த்தனை நடைபெற்றாலோ அல்லது கணக்கில் இருக்க வேண்டிய தொகைக்கும் உண்மையில் இருக்கும் தொகைக்கும் வேறுபாடு இருந்தாலோ வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது. வங்கிச் சேவைகள் தொடர்பான நிறுவனமான பேங்க்பஜார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதில் ஷெட்டி என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், "சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனையைக் கண்டறிந்தவுடன் வாடிக்கையாளர்கள் தாமதமின்றிச் செயல்பட வேண்டும். உடனடியாக புகார் அளிப்பதுடன், வங்கியுடனான ஒவ்வொரு தகவல் தொடர்புக்கும் உரிய ஆதாரங்களைப் பாதுகாப்பதும் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவும்" என்றார்.

வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்:

1. உடனடியாக வங்கிக்குத் தகவல் தெரிவிக்கவும்

உங்களுக்குத் தெரியாத அல்லது நீங்கள் அனுமதிக்காத பணப் பரிவர்த்தனையைக் கண்டறிந்தால், உடனடியாக வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.

வங்கியின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்புகொள்ளலாம். அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் சென்றும் புகார் அளிக்கலாம். வங்கியின் அதிகாரப்பூர்வ செயலி மூலமாகவும் பிரச்சினையைத் தெரிவிக்கலாம்.

புகார் அளிப்பதைத் தாமதப்படுத்தக் கூடாது. விரைவாகத் தகவல் தெரிவித்தால், வங்கி உடனடியாக விசாரணையைத் தொடங்குவதற்கு உதவியாக இருக்கும்.

2. முறையான புகார் அளித்து, புகார் எண்ணைப் பாதுகாத்துக்கொள்ளவும்

தொலைபேசி மூலம் வங்கிக்குத் தகவல் தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொள்ளக் கூடாது. எழுத்துப்பூர்வமாக அல்லது வங்கியின் அதிகாரப்பூர்வ புகார் வழிமுறை மூலம் முறையான புகாரையும் அளிக்க வேண்டும்.

புகார் அளித்ததற்கான குறிப்பு எண்ணைப் பெற்றுப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், சர்ச்சைக்குரிய பணப் பரிவர்த்தனையின் விவரங்கள், வங்கிக் கணக்கு அறிக்கைகள் மற்றும் வங்கியிடமிருந்து கிடைக்கும் எழுத்துப்பூர்வ ஒப்புகை ஆகியவற்றையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

புகாரின் நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கவும், தேவைப்பட்டால் மேலதிக அதிகாரிகளிடம் முறையிடவும் இந்த ஆவணங்கள் உதவும்.

3. தேசிய சைபர் குற்ற உதவி எண்ணான 1930-ஐத் தொடர்புகொள்ளவும்

இணையவழி வங்கிச் சேவையில் மோசடி நடைபெற்றதாகச் சந்தேகித்தால், உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும்.

மத்திய அரசின் தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்கலாம்.

குறிப்பாக, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் பணம் மாற்றப்பட்டிருந்தால், விரைவாகப் புகார் அளிப்பது மிகவும் முக்கியம்.

4. வங்கி நடவடிக்கை எடுக்காவிட்டால் ரிசர்வ் வங்கி குறைதீர் அமைப்பை அணுகவும்

வங்கியில் புகார் அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை என்றாலோ, வங்கியின் பதில் திருப்திகரமாக இல்லை என்றாலோ அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

வங்கியிடம் புகார் அளித்த 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது கிடைத்த பதிலில் திருப்தி இல்லை என்றாலோ, பொருந்தக்கூடிய விதிகளின்படி இந்திய ரிசர்வ் வங்கியின் குறைதீர் அமைப்பை (RBI Ombudsman) அணுகலாம் என்று ஆதில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இதற்காக ரிசர்வ் வங்கியின் புகார் மேலாண்மை அமைப்பு (Complaint Management System - CMS) மூலம் புகார் அளிக்கலாம்.

வங்கியின் பதில் கிடைத்திருந்தால், அந்தப் பதில் மற்றும் ஏற்கெனவே அளித்த புகாரின் விவரங்களையும் இணைப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+