பாஜகவின் கோட்டையிலேயே ‘குஜிலிமஸ்து’ செய்த பிரசாந்த் கிஷோர்.. வெற்றிக்கு காரணமான 5 விஷயங்கள்!
டெல்லி: பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர், பாஜகவை தோற்கடித்து, பீகார் அரசியலில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளார். பாஜகவின் கோட்டையைத் தகர்த்து பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றதற்கான முக்கியமான 5 காரணங்களைப் பார்க்கலாம்.
பீகார் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாங்கிபூர் தொகுதியில் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பிரம்மாண்ட வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் உறுதியானக் கோட்டையாக விளங்கிய இத்தொகுதியை ஜன் சுராஜ் கட்சி கைப்பற்றியுள்ளது.
பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரை விட 19,324 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் பீகாரின் பிரதான எதிர்க்கட்சியான ஆர்ஜேடி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோர் வெற்றிக்கான 5 காரணங்கள்
1. உடனே பிரச்சாரத்தை தொடங்கிய பி.கே
ராஜ்யசபா எம்.பி ஆவதற்காக பாங்கிபூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை நிதின் நபின் ராஜினாமா செய்ததுமே அத்தொகுதியில் தேர்தல் வேலைகளைத் தொடங்கினார் பிரசாந்த் கிஷோர். மக்களுடன் நேரடியாக உரையாடி, மக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, உள்ளூர் பிரச்சனைகளில் கவனம் செலுத்தினார். பிரசாந்த் கிஷோர் மேற்கொண்ட தொடர்ச்சியான அடிமட்டப் பிரசாரமே, அவரது வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், பிரசாந்த் கிஷோரே நேரடியாகக் களமிறங்கியதும், இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.
2. இளம் வாக்காளர்களின் ஆதரவு அலை
நீட் தேர்வு முறைகேடுக்கு எதிரான போராட்டங்களும் பிரசாந்த் கிஷோருக்கான செல்வாக்கை அதிகரித்ததாகக் கருதப்படுகிறது. 40 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பெரும்பாலும் பாஜகவுக்கு ஆதரவளித்தூள்ளனர். அதே நேரத்தில், இளம் வாக்காளர்கள் ஜன் சுராஜை ஆதரித்தனர். பல வீடுகளில், இளைஞர்கள் கிஷோருக்கு வாக்களித்ததாகவும், மூத்த உறுப்பினர்கள் பாஜகவை விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
3. மாற்றத்திற்கான மனநிலை
மாற்றத்திற்கான மக்கள் மனநிலை பிரசாந்த் கிஷோருக்கு சாதகமாக அமைந்து, பாஜகவின் கோட்டையில் அவருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் கொடுத்துள்ளது. வழங்கியது. பாங்கிபூரை தங்களின் 'கோட்டை' என்று வர்ணித்த பாஜகவின் திமிரை சாடிய பிரசாந்த் கிஷோர், "எந்தவொரு அரசியல் கட்சியும் அல்ல, மக்களே ஒரு அரசாங்கத்தை உருவாக்குகிறார்கள், கவிழ்க்கிறார்கள்" என்று பேசினார்.
4. வாக்குப்பதிவு குறைவு
2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சுமார் 7 சதவீதம் குறைவாக இருந்தது. இருப்பினும், இளைஞர்களின் பங்கேற்பு அதிகமாக இருந்ததாகவும், அதே நேரத்தில், நடுத்தர வயது மற்றும் முதிய வாக்காளர்களிடையே வாக்குப்பதிவு குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இளைஞர்கள் வாக்குகள் பிரசாந்த் கிஷோருக்கு விழுந்த அதேசமயம், பாஜகவுக்கு வரவேண்டிய முதிய வாக்காளர்களின் வாக்குகள் வராமல் போனதால், பிரசாந்த் கிஷோரின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது.
5. முஸ்லீம் - யாதவ் ஓட்டுகள்
பிரசாந்த் கிஷோர் பல்வேறு சமூகங்களிடையே ஆதரவைப் பெற்று, என்டிஏ-வின் பாரம்பரிய வாக்காளர் தளத்தில் ஊடுருவுவதில் வெற்றி பெற்றுள்ளார். ஆர்ஜேடிக்கு பலமாகத் திகழும் முஸ்லிம் வாக்குகளையும் கைப்பற்றியுள்ளார் பிரசாந்த் கிஷோர். யாதவ் வாக்காளர்களை, குறிப்பாக அச்சமூகத்தின் இளம் வாக்காளர்களை ஈர்த்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.


Click it and Unblock the Notifications
