54 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா.. சட்டவிரோதமாக நுழைந்தாக குற்றச்சாட்டு!
டெல்லி: டாங்கி ரூட் எனப்படும் கழுதை பாதை வழியாக தங்கள் நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக கூறி, 54 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. 54 பேரும் இன்று காலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ஏற்கெனவே சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் என்று கூறி, இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியிருந்துது. சட்டவிரோதமாக நுழைபவர்களை நாடு கடத்துவது சாதாரண ஒன்றுதான். ஆனால் அமெரிக்கா, இந்தியர்களை போர் கைதிகளை போல கை, கால்களில் சங்கிலி போட்டு கட்டி அனுப்பி வைத்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

54 பேர் எந்தெந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஏஎன்ஐ செய்தி ஊடகம் தகவலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 54 பேரில் 16 பேர் கர்னாலையும், 15 பேர் கைத்தலையும், 5 பேர் அம்பாலாவையும், 4 பேர் யமுனாநகரையும், 4 பேர் குருக்ஷேத்ராவையும், 3 பேர் ஜின்டையும், 2 பேர் சோனிபத்தையும், பஞ்ச்குலா, பானிபட், ரோத்தக், ஃபதேஹாபாத் ஆகிய இடங்களிலிருந்து தலா ஒருவரும் ஆவர்.
54 பேரில் பெரும்பாலானோர் 25-40 வயதுக்கு உட்பட்டவர்கள். நாடு திரும்பியவர்களை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருடன் ஒப்படைத்துள்ளனர். இருப்பினும், முகவர்கள் மீது யாரும் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இது குறித்து கர்னால் டிஎஸ்பி சந்தீப் குமார் கூறுகையில், "இன்று, மேலும் பல இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டனர். அவர்களில் 50 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 16 பேர். பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த இந்த நபர்கள் 'டாங்கி ரூட்' வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக நுழைந்ததால் நாடுகடத்தப்பட்டனர்.
நாடுகடத்தப்பட்ட நபர்களை காவல்துறை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளது. எந்த முகவர் மீதும் எந்த புகாரும் பெறப்படவில்லை. சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் நாங்கள் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம். இது தவறான முறை, இது பின்னர் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நாடுகடத்தப்பட்டவர்களில் யாரேனும் ஏதேனும் கிரிமினல் பின்னணியை கொண்டிருந்தால் விசாரணையில் தெரிய வரும்" என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்கா இந்திய நாட்டினரை நாடுகடத்துவதை தீவிரப்படுத்துகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். குறிப்பாக டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர், அதாவது கடந்த ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் வரை கிட்டத்தட்ட 1,700 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications