அடுத்த ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தல்.. இப்பவே ஆம் ஆத்மி வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்த கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்காக 11 பேர் கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது. டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் நிலையில் தற்போதே வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. இந்தப் பட்டியலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து ஆம் ஆத்மிக்கு தாவியவர்கள் வேட்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபையில் மொத்தம் 70 இடங்கள். இங்கு பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள். 2015 மற்றும் 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியே அடுத்தடுத்து தொடர் வெற்றியைப் பெற்றது.

2015-ம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களையும் பாஜக 3 இடங்களையும் கைப்பற்றின. 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும் பாஜக 8 இடங்களையும் கைப்பற்றின. கடந்த 2 தேர்தல்களிலும் டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவும் முடியவில்லை. பகுஜன் சமாஜ், ஆர்ஜேடி, லோக் ஜனசக்தி கட்சிகள் போட்டியிட்டும் இங்கு வெற்றி பெற முடியவில்லை.
இந்த நிலையில் டெல்லியில் 2-வது முறையாக முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியான கெஜ்ரிவால் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போதே டெல்லி யூனியன் சட்டசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்த பரிந்துரைக்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் டெல்லி முதல்வராக அதிஷி பொறுப்பேற்றார்.
டெல்லி யூனியன் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில் தற்போதே ஆம் ஆத்மி கட்சி தமது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் மொத்தம் 11 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 6 பேர் பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து ஆம் ஆத்மிக்கு தாவியவர்கள். பாஜகவில் இருந்து ஆம் ஆத்மிக்கு தாவிய பிரம் சிங் தன்வார், அனில் ஜா பிபி தியாகி, முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சவுத்ரி ஜூபைர் அகமது, வீர் திங்கன், சுமேஷ் ஷோகீன் ஆகியோர் ஆம் ஆத்மி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications