7 மாதங்களுக்கு பிறகு நடந்த தேர்தல்.. டெல்லி மேயராக ஆம் ஆத்மி கவுன்சிலர் மகேஷ் குமார் கிச்சி தேர்வு!
டெல்லி: டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மகேஷ்குமார் கிச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக - ஆம் ஆத்மி கட்சி மோதலால் டெல்லி மேயர் தேர்தல் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லி மேயர் தேர்தல் நடைபெற்று மேயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி 133 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் அடுத்த 5 மாதங்களுக்கு மட்டுமே டெல்லியின் மேயராக பதவியில் இருப்பார்.
தலைநகர் டெல்லியில், மூன்றாக இருந்த மாநகராட்சிகள், ஒன்றாக இணைக்கப்பட்டு டெல்லி மாநகராட்சியாக ஒருங்கிணைக்கப்பட்டது. 250 வார்டுகளுக்கு கடந்த 2022 டிசம்பர் மாதம் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை வென்றது. பாஜக 104 வார்டுகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றினர்.

நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தில் மேயர் தேர்தல் 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இதன்பின்னர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஷெல்லி ஓபராய் டெல்லி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டெல்லி மாநகராட்சி விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரலில் மேயர் தேர்தல் நடைபெறும். ஐந்தாண்டு காலத்திற்கு, சுழற்சி அடிப்படையில் மேயர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் ஆண்டில் ஒரு பெண், இரண்டாவது ஆண்டில், Open கேட்டகரி, மூன்றாம் ஆண்டு பட்டியலின பிரிவு, 4 மற்றும் 5 ஆம் ஆண்டுகளில் Open கேட்டகரி என்ற முறையில் மேயர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நடப்பு ஆண்டில் டெல்லி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் ஆம் ஆத்மி - பாஜக மோதல், அரவிந்த் கெஜ்ரிவால் கைது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு டெல்லியில் மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது.
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் மகேஷ் குமார் கிச்சி மற்றும் பாஜக கவுன்சிலர் கிஷண் லால் ஆகியோர் மேயர் தேர்தலில் போட்டியிட்டனர். டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இந்நிலையில், மகேஷ் குமார் கிச்சி டெல்லி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
மொத்தம் 265 வாக்குகள் பதிவாகி, இரண்டு வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. செல்லுபடியான வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சியின் மகேஷ் குமார் கிச்சிக்கு ஆதரவாக 133 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கிஷண் லாலுக்கு 130 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் மகேஷ் குமார் கிச்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியின் முதல் பட்டியலின மேயராக மகேஷ் குமார் கிச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஏப்ரலில் அடுத்த மேயர் தேர்வு செய்யப்படுவார் என்பதால், தற்போது மேயராகியுள்ள மகேஷ் குமார் கிச்சியின் பதவிகாலம் இன்னும் 5 மாத காலம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications