"ரூ 1,400 கோடி" காதி ஊழல்! டெல்லி ஆளுநர் மீதே மெகா ஊழல் புகார்.. ஒரே போடாக போட்ட ஆம் ஆத்மி
டெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கும் டெல்லி அரசுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏ பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் சமீபத்தில் மதுபான கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்ட நிலையில், அதில் ஊழல் நடந்துள்ளதாகவும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் பாஜகவினர் ஆளுநரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த விவகாரத்திற்குப் பின்னர் ஆம் ஆத்மிக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் உச்சம் தொட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்
தனது எம்எல்ஏக்கள் அனைவரும் தன்னுடன் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதற்கான வாக்கெடுப்பு நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் உச்சமடைந்து உள்ள நிலையில், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா மீதே ஆம் ஆத்மி ஊழல் புகார் சுமத்தி உள்ளது.

காதி கமிஷன்
2016ஆம் ஆண்டு காதி கமிஷன் தலைவராக இருந்தபோது, வினய் குமார் சக்சேனா ₹ 1400 கோடி மதிப்பிலான பணமதிப்பிழப்பு நோட்டுகளைத் தனது ஊழியர்கள் மூலம் மாற்றியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ துரேகேஷ் பதக் டெல்லி சட்டப்பேரவையிலேயே குற்றம் சாட்டினார். இதுவரை இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. இது ஆளுநருக்கும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையேயான மோதல் போக்கை உச்சமடைய வைத்துள்ளது.

ஊழல்
இது தொடர்பாக அவர் சட்டசபையில் மேலும் கூறுகையில், "அவர் (ஆளுநர்) காதி கமிஷன் தலைவராக இருந்தபோது தான் பணமதிப்பு நீக்கம் நடந்தது. அப்போது அங்குக் காசாளராக பணிபுரிந்த ஒருவர், நோட்டுகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக எழுத்துப்பூர்வமாகவே தெரிவித்து உள்ளார். ஆனால், இந்த புகாரைச் சொன்ன அந்த அதிகாரியே சஸ்பெண்ட் செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. மேலும், பலர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

1400 கோடி ரூபாய்
ஆனால், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை. தலைநகர் டெல்லியில் இருக்கும் அலுவலகத்தில் மட்டும் சுமார் 22 லட்ச ரூபாய் மாற்றப்பட்டது. இப்படியே நாடு முழுவதும் இருக்கும் 7000க்கும் மேற்பட்ட மையங்களில் இருந்து சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் நடந்துள்ளது" என்றார். அப்போது டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஆளுநர் சக்சேனாவுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

பதவி விலக வேண்டும்
இதற்கு பொறுப்பேற்று சக்சேனா ஆளுநர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். டெல்லி சட்டசபையில் இருக்கும் காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், ஆளுநர் ஊழல் செய்துள்ளார் என்றும் ஆளுநரைக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பதாகை கொண்டு போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications