ஆம் ஆத்மி மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயின் கைது! ஊழல் வழக்கில் ஐஏஸ் அதிகாரியும் சிக்கினார்
டெல்லி: டெல்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான டெண்டர் பணிகளில் முறைகேடு மற்றும் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் டெல்லி அமைச்சருமான சத்யேந்தர் குமார் ஜெயின் உட்பட 6 பேரை டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. அவருடன் டெல்லி ஜல் போர்டின் முன்னாள் சிஇஓ மற்றும் ஐஏஎஸ் அதிகாரியுமான உதித் பிரகாஷ் ராய் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் இப்போது பாஜக ஆட்சி அமைந்துள்ளது. அதற்கு முன்பு 10 ஆண்டுகள் டெல்லியில் ஆம் ஆத்மி அரசே நடந்து வந்தது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்ததாக பாஜக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அப்படியொரு ஊழல் வழக்கில் தான் ஆம் ஆத்மி மூத்த தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்யேந்தர் ஜெயின்
டெல்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சத்யேந்தர் குமார் ஜெயினை டெல்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. அவருடன் ஐஏஐஎஸ் அதிகாரியும் டெல்லி ஜல் போர்டின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான உதித் பிரகாஷ் ராயை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்களுடன் முன்னாள் ஒப்பந்த ஆலோசகர் அங்கித் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்ன வழக்கு?
டெல்லி ஜல் போர்டின் கீழ் செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துவதற்கான டெண்டர் வழங்கியதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக கூறி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லி அரசின் கண்காணிப்பு துறை அளித்த புகாரைத் தொடர்ந்து, 2024 மே 11ஆம் தேதி இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
மாற்றப்பட்ட விதிகள்
டெண்டர் விதிமுறைகள் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டதாகவும், போட்டியை கட்டுப்படுத்தும் வகையில் நிபந்தனைகள் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு நிதிக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டதாகவும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது. மேலும், முன்மொழியப்பட்ட பைலட் ஆய்வு நடத்தப்படவில்லை என்றும் பயன்படுத்தப்பட வேண்டிய தொழில்நுட்பம் மற்றும் பொருட்கள் தொடர்பான கட்டுப்பாடுகளும் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஆதரவாக இருக்கும்படி டெண்டரில் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதாரம்
விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட எலக்டிரிக்கல் ஆதாரங்களை ஆய்வு செய்ததில், சில குறிப்பிட்ட நபர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்களுக்கு இடையே டெண்டர் தொடர்பாக தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றதாக ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதாவது டெண்டர் விதிமுறைகள் மற்றும் அது தொடர்புடைய ஆவணங்கள் டெல்லி ஜல் போர்டின் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பே சில குறிப்பிட்ட நபர்களுக்கும் இடைத்தரகர்களுக்கும் பரிமாறப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கைது
அப்போது டெல்லி ஜல் போர்டு தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி உதித் பிரகாஷ் ராய் மற்றும் அவரது உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1.52 கோடி ஏஎன் எண்டர்பிரைசஸ் மூலம் அனுப்பப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த தொகை பின்னர் வேறு சொத்துகளை வாங்க பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், 6 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டன. இந்த சூழலில் தான் இன்று ஆகஸ்ட் 18ஆம் தேதி அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
