உபி தேர்தல் ஏபிபி சர்வே.. சிறந்த முதல்வர் வேட்பாளர் யோகி தான் டாப்.. அகிலேஷ், மாயாவதிக்கு என்ன இடம்?
டெல்லி: அடுத்தாண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், சிறந்த முதல்வர் வேட்பாளருக்கான ஏபிபி கருத்துக்கணிப்பில் 41% மக்களின் ஆதரவுடன் யோகி ஆதித்யநாத் முதல் இடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் அடுத்தாண்டு தொடக்கத்தில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் பஞ்சாப் தவிர மற்ற 4மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் உள்ளது. தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன.

பாஜக
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. குறிப்பாக பாஜக இந்த முறையும் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தொடர வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். உத்தரகண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு மட்டும் 2 முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல விவசாய சட்டங்களை ரத்து செய்ததும் பஞ்சாப் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு கை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசம்
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உத்தரப் பிரதேசத்திற்கு பாஜக கூடுதல் முக்கியத்துவத்தையே அளித்து வருகிறது. பிரதமர் மோடி மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாராணசி தொகுதி உள்ள மாநிலம் என்பதால் இதை இமேஜ் விஷயமாகவும் பாஜக தலைமை கருதுகிறது. இதனால் தான் அனைத்து கடந்த சில வாரங்களில் பிரதமர் மோடி பல முக்கிய திட்டங்களை உத்தரப் பிரதேசத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

2017 சட்டசபைத் தேர்தல்
வரும் 2024 மக்களவை தேர்தலிலும் உத்தரப் பிரதேசம் தான் பாஜகவின் டாப் குறியாக உள்ளது. எனவே, மக்களவை தேர்தலையும் உபியில் ஆளும் கட்சியாக இருந்து எதிர்கொள்ள வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. முன்னதாக, கடந்த 2017இல் உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக மிகப் பெரியளவில் வென்றது. மொத்தமுள்ள 403 இடங்களில் 312 இடங்களை பாஜக கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சி பெற்றது. அதன் பின்னர் உபி முதல்வராக யோகி ஆதித்யநாத் நியமிக்கப்பட்டார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் இமேஜ்
கடந்த 2020 வரையிலும் உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்திற்கு எந்த விதமான எதிர்ப்புகளும் இல்லை. உபி மக்களின் முழு ஆதரவும் கொண்ட முதல்வராகவே யோகி இருந்து வந்தார். ஆனால், இந்த ஆண்டு நிலைமை சற்று மாறியது. கொரோனா 2ஆம் அலையை மோசமாகக் கையாண்டது தொடர்பாக யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியை ஏற்பட்டது. 2ஆம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் கொரோனா சடலங்களைக் கங்கை ஆற்றில் தூக்கிப் போடும் அவல சூழல் கூட ஏற்பட்டது. கங்கை நதியில் சடலங்கள் மிதந்து சென்ற படங்கள் இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஏபிபி கருத்துக்கணிப்பு
இதன் காரணமாகப் பொதுமக்களின் அதிருப்தியைப் போக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது பாஜக. இந்தச் சூழலில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்த கருத்துக் கணிப்புகளை ஏபிபி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் உத்தரப் பிரதேசத்தில் கடந்த முறையைக் காட்டிலும் இடங்கள் குறைந்தாலும் கூட பாஜகவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

யோகி தான் டாப்
மேலும், சிறந்த முதல்வர் வேட்பாளர்களுக்கான கருத்துக் கணிப்பில் தற்போது முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத்தே டாப்பில் உள்ளார். அவருக்கு சுமார் 41% மக்கின் ஆதரவு உள்ளதாக ஏபிபி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகிலேஷுக்கு என்ன இடம்
அவருக்கு அடுத்தபடியாக 33.5% மக்கள் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரைத் தொடர்ந்து பகுஜுன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு 15% மக்கள் ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வெறும் 4.3% மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாக ஏபிபி கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications