என்னடா இது.. மோடிக்கு நடிகையால் இன்ஸ்டாகிராமில் வந்த சோதனை.. Gen Zல் இவ்வளவுதான் செல்வாக்கா?
டெல்லி: இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கையில் பிரதமர் மோடியை, நடிகை ஷ்ரத்தா கபூர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை 9.13 கோடி பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில், அவரை விட ஷ்ரத்தா கபூரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
எக்ஸ் வலைதள பக்கத்தில் உலகத் தலைவர்களிலேயே 10.1 கோடி ஃபாலோவர்ஸ்களுடன் பிரதமர் மோடி டாப் லிஸ்டில் இருந்து வருகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துபாய் அரசர் ஷேக் முகமது, போப் பிரான்சிஸ் ஆகிய உலகத் தலைவர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கில் மட்டும் 5.6 கோடிக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் பிரதமர் நரேந்திர மோடியை விட பிரபல பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடிகை ஷ்ரத்தாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கை 9.14 கோடி பேர் பின்தொடர்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியை 9.13 கோடி பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். 1 லட்சம் பேர் அதிகமாக நடிகை ஷ்ரத்தாவை ஃபாலோ செய்கின்றனர். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் நான்காவது இடத்துக்குச் சென்றுள்ளார் பிரதமர் மோடி.
9.14 கோடி ஃபாலோவர்ஸ்களின் எண்ணிக்கையுடன் இன்ஸ்டாகிராம் கணக்கில் அதிக ஃபாலோவர்ஸை கொண்ட இந்தியர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை ஷ்ரத்தா கபூர். இவரது ஸ்ட்ரீ 2 திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படம் ஷ்ரத்தா கபூருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ட்ரீ 2 திரைப்படம் 300 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளிக் குவித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்துள்ளது.
இதேபோல, இந்திய கிரிக்கெட் வீரர் கிங் கோலி என்று அழைக்கப்படும் விராட் கோலியை 27.1 கோடி பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். பிரியங்கா சோப்ராவை 9.18 கோடி பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ்களுடன் முன்னிலையில் உள்ளனர். ஆலியா பட் 8.51 கோடி, தீபிகா படுகோன் 7.98 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளனர்.
தற்போது இந்த டாப் வரிசையில் நடிகை ஷ்ரத்தா கபூரும் இடம்பிடித்துள்ளார். அதேபோல, இந்திய அரசியல் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை 2.67 கோடி பேர் பின்தொடர்கின்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை 2.76 கோடி பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் கணக்கில் அதிக ஃபாலோவர்ஸை கொண்ட இந்தியர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நடிகை ஷ்ரத்தா கபூருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Gen Z எனப்படும் 27 வயதுக்கு குறைவான இளைஞர், இளம் பெண்கள் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அவர்களிடையே மோடியை விடவும், விராட் கோலி, ஷ்ரத்தா போன்றோர்தான் அதிக செல்வாக்கு பெற்றுள்ளனர் என்பதை ஃபாலோவர் லிஸ்ட்டை வைத்து புரிந்துகொள்ள முடிகிறது.












Click it and Unblock the Notifications