பெரிய அடி! இனி ஆசியாவில் பெரிய பணக்காரர் அதானி இல்லை.. சில நாட்களில் தலைகீழ் மாற்றம்! அடபாவமே
உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி சில வாரங்களில் பல இடங்களை இழந்துள்ளார்.
டெல்லி: உலக பணக்காரர்கள் வரிசையில் ஒரு கட்டத்தில் இரண்டாம் இடம் வரை சென்ற கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இப்போது கடுமையாகச் சரிந்து வருகிறது. இப்போது அவர் 15ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக அதானி இருக்கிறார். பல துறைகளில் நிறுவனங்களை நடத்தி வரும் இவர் தொழிலை மிக வேகமாக விரிவுபடுத்தினார். அதேபோல அவரது சொத்து மதிப்பும் மிக வேகமாக உயர்ந்தது.
இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் மின்னல் வேகத்தில் உயர்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் பல ஆண்டுகளாக இந்தியாவின் டாப் பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியையும் பின்னுக்கு தள்ளினார்.

அதானி
அதானியின் வளர்ச்சி அத்துடன் நிற்கவில்லை.. தொடர்ந்து வளர்ந்த அவர், ஆசியாவில் மிகப் பெரிய பணக்காரராக விரைவில் உருவெடுத்தார். மேலும், ஒரு கட்டத்தில் உலகின் டாப் பணக்காரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்திற்குக் கூட சென்றார். தொடர்ந்து பணக்காரர்கள் பட்டியலில் வேகமாக முன்னேறி வந்த நிலையில், இப்போது சடன் பிரேக் போட்டுள்ளனர். கடந்த வாரம் ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையே இதற்குக் காரணமாகும்.

அறிக்கை
இந்த அறிக்கையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருந்தது. இது வெளியான பிறகு அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இடையில் ஓரிரு நாட்கள் அதானி நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தாலும் கூட, ஒட்டுமொத்தமாக அவரது பங்குகள் தொடர்ச்சியாக கடும் சரிவையே சந்தித்து வந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையை மறுக்கும் வகையில் அதானி குழுமம் சார்பிலும் விரிவான பதில் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

சரிவு
இருந்த போதிலும், ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின்னர் கவுதம் அதானியின் நிறுவனப் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளது. இதனால் அதானி நிறுவனங்களின் மதிப்பு பல லட்ச ரூபாய் வரை இழந்தது. அதானியின் சொத்து மதிப்பு இப்படி கிடுகிடுவென சரிந்ததால், ஆசியாவின் மிக பெரிய பணக்காரர் என்ற பட்டத்தையும் அதானி இழந்துள்ளார். அதானியின் சொத்து மதிப்பு இப்போது 75.11 பில்லியன் அமெரிக்க டாலாராக உள்ளது. பங்குச் சந்தையில் அவரது நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதே இதற்குக் காரணமாகும்.

15ஆவது இடம்
அவரது சொத்து மதிப்பு இப்போது 75.11 பில்லியன் அமெரிக்க டாலாராக சரிந்த நிலையில், ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியலில் 15வது இடத்திற்கு அதானி தள்ளப்பட்டுள்ளார். முகேஷ் அம்பானி 83.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 9ஆவது இடத்தில் உள்ள நிலையில், அதானி 15ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அதானி நிறுவனம் இப்போது தனது பங்குகள் சரிவதைத் தடுக்கவும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

அதானி பங்குகள்
ஹிண்டன்பர்க் அறிக்கை வந்ததில் இருந்து அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் சுமார் 28 சதவீதம் சரிந்துள்ளது. அதேபோல அதானி போர்ட்ஸ் பங்குகள் 19 சதவீதம் சரிந்தது. அதானி பவர் மற்றும் அதானி வில்மர் ஆகியவை தலா 5 சதவீதம் வரை சரிந்துள்ளன. மேலும், அதானி டோட்டல் கேஸ் 10 சதவீதம் சரிந்துள்ளன. அதேபோல அதானி டிரான்ஸ்மிஷன் 3 சதவீதமும், அதானி கிரீன் எனர்ஜி 5.6 சதவீதமும் சரிந்தன. அதேபோல அதானி வெளியிட்டுள்ள டாலர் பத்திரங்களின் மதிப்பும் தொடர்ந்து சரிந்தே வருகிறது.

முடங்கியது நாடாளுமன்றம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. இது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. இந்த ஆய்வறிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு புறம் இகுக்க அனைத்து வங்கிகளும் அதானி குழுமத்தில் செய்த முதலீடுகள் குறித்த தகவல்களையும் ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது.












Click it and Unblock the Notifications