அமலுக்கு வந்த மத்திய அரசின் புதிய விதிகள்.. அதிரடியாக விலையை குறைத்தது அதானி டோட்டல் கேஸ்!
டெல்லி: பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அறிவித்த புதிய கட்டண உத்தரவைத் தொடர்ந்து, அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் நிறுவனம், வீடுகளுக்கான பைப்லைன் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு மற்றும் வாகனங்களுக்கான கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ் (CNG) விலைகளைக் குறைத்துள்ளது.
இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நேரடி நிவாரணம் அளிப்பதுடன், தூய்மையான எரிபொருள் பயன்பாட்டை துரிதப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

விலை குறைவு
ஜனவரி 1, முதல் அமலுக்கு வந்த இந்த சீர்திருத்தம், மூன்று எரிவாயு மண்டலங்களை இரண்டாக ஒருங்கிணைத்தது. இதன்மூலம், PNG மற்றும் CNG ஆகியவற்றுக்கு சீரான கட்டணம் நாடு முழுவதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருமித்த கட்டண அமைப்பு எரிவாயு போக்குவரத்துச் செலவுகளை எளிதாக்கி, நகர எரிவாயு விநியோகஸ்தர்களுக்கான செலவுகளைக் கணிசமாகக் குறைக்கிறது.
விலை நிலவரம் என்ன?
அதானி குழுமம் மற்றும் பிரெஞ்சு நிறுவனமான டோட்டல் எனர்ஜீஸ்-இன் கூட்டு நிறுவனமான ATGL, சிஎன்ஜி மற்றும் வீட்டு உபயோக இயற்கை எரிவாயு விலைகளை ₹4 வரை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
விலைக்குறைப்பு மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா பகுதிகளில் சிஎன்ஜி ₹0.50 முதல் ₹1.90 வரையும், வீட்டுப் PNG ₹1.10 வரையும் குறைந்திருக்கிறது உள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, டெல்லி என்சிஆர், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் எல்லையோரப் பகுதிகளில் சிஎன்ஜி ₹1.40 முதல் ₹2.55 வரையும், வீட்டுப் PNG ₹1.10 முதல் ₹4.00 வரையும் குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு விலை குறைப்பு?
மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில், சிஎன்ஜி விலைகள் கிலோவுக்கு ₹1.81 முதல் ₹4.05 வரை குறைந்துள்ளன, மேலும் வீட்டு உபயோக PNG ஒரு ஸ்டாண்டர்டு கன மீட்டருக்கு ₹4.00 வரை குறைந்திருக்கிறது. ATGL மட்டுமின்றி, GAIL Gas Limited சிஎன்ஜி மற்றும் PNG விலைகளில் ₹1 குறைப்பு செய்துள்ளது. இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (IGL) டெல்லி மற்றும் என்சிஆர் நகரங்களில் PNG விலையை ஒரு scm-க்கு ₹0.70 குறைத்துள்ளது. திங்க் கேஸ் சிஎன்ஜி விலையை ₹2.50 வரையும், PNG விலையை ₹5 வரையும் குறைத்துள்ளது.
கோடிக்கணக்கானவர்களுக்கு பலன்
ATGL-இன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சுரேஷ் பி. மாங்லானி இது குறித்து கூறுகையில், "எரிவாயு போக்குவரத்துச் செலவுகளை எளிதாக்கி, முறைப்படுத்தும் இந்தச் சிறப்பான முயற்சி, எரிவாயுவை மலிவாகவும் அணுகக்கூடிய ஒன்றாகவும் மாற்றுவதன் மூலம் தூய்மையான எரிபொருட்களின் பரவலான பயன்பாட்டை ஊக்குவிக்கும். இது கோடிக்கணக்கான நுகர்வோருக்கு நேரடியாகப் பலனளிக்கும்" என்று கூறி இந்தச் சீர்திருத்தத்தை வரவேற்றார்.
ஏன் இந்த மாற்றம்?
ATGL நிறுவனம் 1.2 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு சேவை செய்து, ஏறத்தாழ 1,100 சிஎன்ஜி நிலையங்களை நாடு முழுவதும் இயக்குகிறது. இந்தியாவின் மொத்த எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயு சுமார் 6% மட்டுமே உள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டுக்குள் 15% என்ற அரசின் இலக்கை அடைய இத்தகைய செலவு முறைப்படுத்தல் நடவடிக்கைகள் முக்கியமானவை. இது எரிவாயுவை முக்கிய மாற்ற எரிபொருளாக நிலைநிறுத்த உதவும்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம், டிசம்பர் 16 அன்று அறிவித்த இந்தத் திருத்தப்பட்ட கட்டணங்கள், ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தன. இதன் கீழ், தூர அடிப்படையிலான மூன்று கட்டண மண்டலங்கள் இரண்டாக (300 கிமீ வரை மற்றும் அதற்கு அப்பால்) குறைக்கப்பட்டன. எரிவாயு உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், அனைத்து சிஎன்ஜி மற்றும் வீட்டு உபயோக PNG வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் ஒரு மலிவான மண்டலம்-1 கட்டணம் தற்போது பொருந்தும்.












Click it and Unblock the Notifications