பாமாயில் விலை குறையல.. அதுக்குள்ள சாப்பாட்டு அரிசி.. கிலோ ரூ.100ஐ தாண்டுமா? தீபாவளி நேரத்தில் தலைவலி
சென்னை: பாமாயில் விலை இன்னும் குறைந்தபாடில்லை.. தீபாவளி பண்டிகையும் வரப்போகிறது.. இந்த நேரத்தில் குடும்ப பட்ஜெட்டை போட்டு பார்த்தால், ஏற்கனவே மளிகை பொருட்கள், காய்கறிகள் விலை உயர்வால் மக்கள் திணறி கொண்டிருக்கிறார்கள்.. இப்போது அரிசி விலையும் அடுத்தடுத்து உயர்ந்து கொண்டே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், தீபாவளிக்கு முன்பாக ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.100-ஐ தாண்டும் நிலை ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகி இருப்பதுதான் பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது..
தமிழ்நாட்டில் அரிசி விலை கடந்த 4 மாதங்களில் மட்டும் 4-வது முறையாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை அரிசியின் விலை ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளது. இதனால் அன்றாடம் அரிசி வாங்கும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் மாத செலவும் கணிசமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது..

அரிசி விலை உயர்வு
ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு மூட்டை டீலக்ஸ் பொன்னி அரிசி தற்போது ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.1600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பொன்னி அரிசி ரூ.1,950 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், ரூ.1900-க்கு கிடைத்த வெள்ளை பொன்னி அரிசி இப்போது 2 ஆயிரத்து 300 ஆக எகிறியுள்ளது..
900-க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி அரிசியின் விலையும் இப்போது ரூ.1200 என்கிறார்கள்.. ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சரிசியின் விலை ரூ.1,800க்கு உயர்ந்து விட்டது.. 25 கிலோ எடை கொண்ட சிவாஜி பொன்னி அரிசி மூட்டையின் விலையும் ரூ.1800லிருந்து ரூ.2400 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, வீட்டில் தினமும் பயன்படுத்தும் அரிசிக்கே இப்படி விலை ஏறிக்கொண்டே போகிறது..
1 கிலோ அரிசி 100 ஐ தாண்டுமோ
இதனிடையே, அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பும் குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் நெல் விளைச்சலும் போதிய அளவில் இல்லை. வேலை ஆட்கள் தட்டுப்பாடு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நவீன அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விவசாயிகள் கஷ்டப்பட்டு நெல் விளைவித்தாலும், அவர்களின் உழைப்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை.. நெல் உற்பத்தி குறைந்து வருவதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இதனால் தமிழகத்தில் அரிசி பற்றாக்குறையை சமாளிக்க ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அரிசியை வாங்கி வருகிறார்கள்.. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து அரிசி கொண்டு வரும் வாகனங்களை அரசு திருப்பி அனுப்புவதாகவும் வியாபாரிகள், இந்த நிலை தொடர்ந்தால் பண்டிகை காலங்களில் அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டும் நிலை உருவாகலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
வணிகர் சங்கம் கோரிக்கை
அதனால்தான், தமிழகத்தில் அரிசி விலை உயர்வை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
வெளிமாநிலங்களில் இருந்து அரிசி கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்புவதை கைவிட வேண்டும் என்றும், அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்துவதுடன் வரும் ஆண்டில் நெல் உற்பத்தியை அதிகரிக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்றும் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இல்லாவிட்டால் தீபாவளி போன்ற பண்டிகை நேரத்தில் அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டும் நிலை உருவாகலாம் என்பதுதான் இப்போது பொதுமக்களின் கவலையாக உள்ளது..
பாமாயில் விலை குறையுமா
அரிசி மட்டுமா என்றால் அதுவும் இல்லை.. பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.. இப்போதைக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் லிட்டருக்கு ரூ.148-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.. பண்டிகை நேரத்தில் பாமாயில் விலையும் அதிகமாக இருப்பதால் குடும்ப செலவு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எப்படியும் பண்டிகைக்கு பலகாரங்களை செய்ய வேண்டிவரும்.. அதற்குள் இந்த விலையை குறைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...!!!




Click it and Unblock the Notifications
