"திரிணாமுல் கட்சியே காலி.. பேசாம காங்கிரஸில் சேர்ந்துடுங்க.." மம்தாவுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்!
டெல்லி: மம்தா பானர்ஜி காங்கிரஸில் இருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கி கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் காங்கிரஸுக்கே திரும்ப வேண்டும் என காங்கிரஸின் அதிர் ரஞ்சன் சவுத்ரி அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா இப்போது இக்கட்டான நிலையில் இருக்கும் சூழலில், காங்கிரஸின் இந்த அழைப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் வரை சிங்கம் போல இருந்த மம்தா இப்போது மிகவும் இக்கட்டான ஒரு சூழலை எதிர்கொண்டுள்ளார். அவரது கட்சியை சேர்ந்தவர்களே அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர். எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என பலரும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்டனர். இதனால் அரசியல் ரீதியாக மம்தா மிக மோசமான நிலையில் இருக்கிறார்.

காங்கிரஸில் இணையுங்கள்
இதற்கிடையே மம்தா பானர்ஜியை காங்கிரஸில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தாவின் தலைமையை ஏற்றுக்கொண்டு அவருடன் இணைந்து செயல்படவும் காங்கிரஸ் தயாராக இருப்பதாக காங்கிரஸின் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த அழைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில் மம்தாவை நீண்ட காலமாகவே அதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். ஆனால், இப்போது அவரே காங்கிரஸில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
நிலைமை மோசம்
டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் மம்தா பங்கேற்ற அடுத்த நாளிலேயே அவர் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் தனியாக செயல்பட வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்று கூறினார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சந்தித்த தோல்வி மற்றும் அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக திரிணாமுல் இப்போது இக்கட்டான சூழலில் இருப்பதாக தெரிவித்தார்.
தயார்
அவர் மேலும், "மம்தா பானர்ஜி தனது மீதமுள்ள எம்பி, எம்எல்ஏக்களுடன் நேரடியாக காங்கிரஸில் இணைய வேண்டும். மேற்கு வங்கத்தில் அவரது தலைமையை ஏற்றுக்கொண்டு அவருடன் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் தயாராக உள்ளது" என அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார். அதே நேரத்தில் காங்கிரஸில் மம்தா இணைந்தால் சில விஷயங்களை விட்டுவிட்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும், "உங்களுடைய அரசியல் சுமையை கொண்டு வர வேண்டாம். உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துபவரை விட்டுவிட்டு வாருங்கள்" என்று அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார். அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் மம்தாவின் மருமகனும் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜியை தான் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டதாக தெரிகிறது. தேர்தல் தோல்விக்கு அபிஷேக் பானர்ஜி காரணம் என பரவலாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அதிர் ரஞ்சன் சவுத்ரியும் அதையே குறிக்கும் வகையில் பேசியுள்ளார்.
மம்தா- காங்கிரஸ் உறவு
மம்தா பானர்ஜி தனது அரசியல் பயணத்தை காங்கிரஸில்தான் தொடங்கினார். 1998ல் அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸை தொடங்கினார். அதன் பின்னர் காங்கிரஸுடனான அவரது உறவு கூட்டணி, மோதல் என மாறி கொண்டே இருந்தது. 2012ல் காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் விலகியது. மேற்கு வங்கத்திலும் இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் மோதல் நீடித்தது. அதே நேரத்தில், தேசிய அளவில் இந்தியா கூட்டணி உருவானபோது, இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இடையில் சில மோதல்கள் இருந்தாலும் இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைந்தே செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
