‛‛இனி நான் தான் ராஜா’’.. ஜேடியூ தலைவராக மீண்டும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்வு! பரபர காரணம்
டெல்லி: ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியூ) கட்சியின் தலைவராக மீண்டும் நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லாலன் சிங் இன்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அடுத்த சில நிமிடங்களில் நிதிஷ் குமார் அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தான் நிதிஷ் குமார் மீண்டும் கட்சியின் தலைவரானதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகார் மாநில முதல்வராக இருப்பவர் நிதிஷ் குமார். இவர் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை நடத்தி வருகிறார்.

கடந்த 2003ம் ஆண்டில் நிதிஷ் குமார், ஜார்ஜ் பெர்னான்டசின் சமதா கட்சி, மறைந்த பீகார் மாநில மூத்த அரசியல்வாதியான சரத் யாதவின் ஜனதாதளம், லோக் சக்தி உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஐக்கிய ஜனதாதளம் கட்சி உருவாக்கப்பட்டது.
இதையடுத்து 2003 முதல் 2016 வரை ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவராக சரத் யாதவ் இருந்தார். அதன்பிறகு நிதிஷ் குமார் அந்த பொறுப்பை ஏற்றார். அதன்பிறகு 2021ல் லாலன் சிங் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் செயல்பட்டு வந்தார். இதையடுத்து நிதிஷ் குமார் கட்சி பொறுப்புகள் எதுவும் வகிக்காத நிலையில் பீகார் முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் மீண்டும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் பதவிக்கு நிதிஷ் குமார் குறிவைத்துள்ளதாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் வெளியாகின. அதன்படி இன்று டெல்லியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக உள்ள லாலன் சிங் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார்.
இதனை லாலன் சிங் செயற்குழுவில் அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இதனால் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்'' என தெரிவித்தார். இதையடுத்து லாலன் சிங்கின் ராஜினாமா செயற்குழுவால் ஏற்கப்பட்டது.
இதையடுத்து கட்சியின் புதிய தலைவராக நிதிஷ் குமார் அடுத்த சில நிமிடங்களிலேயே தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தான் இந்த பொறுப்பு மாற்றத்தின் பின்னணியில் உள்ள முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ‛இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார் விரும்புகிறார். இதனை மனதில் வைத்தே எதிர்க்கட்சிகளை அவர் ஒருங்கிணைக்கும் பணியில் மேற்கொண்டார். இதில் நிதிஷ் குமார் வெற்றி பெற்ற நிலையில் 28 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன.
ஆனால் அதன்பிறகு ‛இந்தியா' கூட்டணியில் நிதிஷ் குமாருக்கான முக்கியத்துவம் குறைந்துள்ளதாக அவர் கருதுகிறார். அதோடு நிதிஷ் குமாரின் முக்கியத்துவம் பற்றி ‛இந்தியா' கூட்டணி தலைவர்களிடம் லாலன் சிங் எடுத்துரைக்கவில்லை என நினைக்கிறார். மேலும் தான் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாமல் இருப்பதால் ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் தன்னை மதிக்காமல் உள்ளதாக அவர் நினைக்கிறார்.
இதனால் தான் லாலன் சிங்கிற்கு பதில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் ஆகி உள்ளார். மேலும் தற்போது பீகாரில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதிஷ் குமார் உள்ள நிலையில் துணை முதல்வராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளார். இந்நிலையில் தான் நிதிஷ் குமாரின் கட்சியின் தலைவரான லாலன் சிங்கிற்கும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இடையேயான நட்பு என்பது அதிகரித்துள்ளது. இது நிதிஷ் குமாருக்கு பிடிக்கவில்லை. இதுவும் லாலன் சிங்கிடம் இருந்து நிதிஷ் குமார் தலைவர் பொறுப்பை பறித்துள்ளதாக இன்னொரு காரணமாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications