இறங்கி வந்த சீனா.. ஆச்சர்ய ரியாக்சன்.. மோடியின் சுதந்திர தின உரைக்கு பின் நடந்த மாற்றம்!
டெல்லி: பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும், வேறுபாடுகளை முறையாக நிர்வகிப்பதற்கும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ஒருவருக்கொருவர் மதித்து செயல்படுவது தான் சரியான பாதை என்றும் கூறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரைக்குபதிலளிக்கும் வகையில் சீன வெளியுறவு அமைச்சகம் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
Recommended Video
பிரதமர் மோடி சுதந்திர தின உரையில், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மிக உயர்ந்தது என்று கூறினார். "எல்.ஏ.சி முதல் (எல்லை கட்டுப்பாடு) முதல் எல்.ஐ.சி (உண்மையான கட்டுப்பாட்டு லைன்) வரை, நாட்டின் இறையாண்மையை கண்காணிக்கும் வீரர்கள், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் பதிலளித்துள்ளனர் (பதிலடி)" என்று மோடி கூறினார். கிழக்கு லடாக்கில் எல்லை மோதலைக் குறிப்பிட்டு மோடி பேசினாலும். சீனாவின் பெயரை குறிப்பிடாமல் கூறினார்.
மோடியின் பேச்சு குறித்து கருத்து கேட்ட போது சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் "பிரதமர் மோடியின் உரையை நாங்கள் கவனித்தோம். நாங்கள் நெருங்கிய நட்பு உறவுக கொண்டவர்கள, நாங்கள் அனைவரும் 100 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட வளர்ந்து வரும் நாடுகள்.

மதிப்பதும் ஆதரிப்பதும்
எனவே இருதரப்பு உறவுகளின் சிறந்த வளர்ச்சிதான் இரு மக்களின் நலனுக்கு மட்டுமல்லாமல், ஸ்திரத்தன்மை, அமைதி, பிராந்தியத்தின் செழிப்பு மற்றும் ஒட்டுமொத்தமாக உலகிற்கும் உதவுகிறது. இரு தரப்பினருக்கும் சரியான பாதை என்பது, ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதும் ஆதரிப்பதும் தான். இப்படி செயல்பட்டால் தான் நம்முடைய நீண்டகால நலன்களுக்கு உதவும்.

சீனா தயார்
எனவே, இரு நாடுகளிடையே அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும், கருத்து வேறுபாடுகளை முறையாக நிர்வகிப்பதற்கும், நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளின் நீண்டகால வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது" இவ்வாறு கூறினார்.

அப்படி கருத முடியாது
லடாக்கில் உள்ள எல்லை கட்டுபபாட்டு கோட்டு (எல்.ஐ.சி) பகுதி முழுவதும், ஊடுருவிய இடங்களிலிருந்து சீனா பின்வாங்க தயாராக இருப்பதாக இந்த பேச்சை குறிப்பிட முடியுமா என்பது தெளிவாக தெரியவில்லை. ஏனெனில் சீனாவில் எல்லை தாண்டிய ஊடுருவல்கள் காரணமாகவே மே மாத தொடக்கத்தில் இருந்து இரு தரப்பினருக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரிக்க காரணமாக இருந்தது.

நம்பிக்கை சிதைவு
ஜூன் 15 அன்று கால்வானில் சீன வீரர்களின் வன்முறை மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதன் பின்னர் இரு நாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சீன வீரர்களும் கொல்லப்பட்டனர், ஆனால் அந்த எண்ணிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்த மோதல்கள் - 45 ஆண்டுகளில் முதல் முறையாக நடந்ததாகும்.. உயிரிழப்புகளை ஏற்படுத்தி இரு நாடுகளுக்கிடையிலான நம்பிக்கையை சிதைத்துள்ளது.

மோதலுக்கு காரணம்
இதனிடையே கால்வான் மோதலுக்கு இந்தியாவே காரணம் என்றும் எல்.ஐ.சி மீறல் இல்லை என்றும் சீனா குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் இதை ஏற்காத இந்தியா சீனாவே பிரச்சனைக்கு காரணம் என்று என்று கூறியுள்ளது. சீன துருப்புக்கள் தாங்கள் ஊடுருவியுள்ள பகுதிகளில் தொடர்ந்து தங்கியிருக்க விரும்பியதையும் இந்தியா தெரிவித்தது. மேலும் ஏப்ரல் மாதத்தில் சீன துருப்புக்கள் தாங்கள் ஆக்கிரமித்த இடங்களில் இருந்து பழைய இடத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

தீர்வு இல்லை
இதற்காக இராணுவ மட்டத்தில் ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளும், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர மட்டத்தில் மூன்று பேச்சுக்களும் இதுவரை எந்த முடிவையும் தரவில்லை. கடந்த வாரம், இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த முட்டுக்கட்டை தீர்க்க எதிர்வரும் நாட்களில் மேலும் பேச்சுவார்த்தை எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தது.












Click it and Unblock the Notifications