பிகே மீட்டிங்கை தொடர்ந்து.. பரபரக்கும் தேசிய அரசியல்.. டெல்லி பறக்கும் மம்தா.. சோனியாவுடன் மீட்?!
டெல்லி: மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அடுத்த வாரம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்க உள்ளார்.
தேசிய அரசியல் கடந்த சில நாட்களாக பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. முக்கியமாக பிரஷாந்த் கிஷோரின் அடுத்தடுத்த அரசியல் சந்திப்புகளால் தேசிய அரசியல் களம் சூடாக உள்ளது.
கடந்த சில வாரங்களாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் உட்பட தலைவர்களை பிரஷாந்த் கிஷோர் தொடர்ச்சியாக சந்தித்து வந்தார். தேசிய அளவில் பெரிய எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவதற்கான சந்திப்பாக இது இருக்கும் என்று பேச்சுக்கள் அடிபட்டன.

சந்திப்பு
அதன்பின் பிரஷாந்த் கிஷோர் நேற்று முதல்நாள் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும், ராகுல், ப்ரியங்கா ஆகியோருடன் டெல்லியில் சந்திப்பு நடத்தினார். காங்கிரஸ் கட்சியில் பிரஷாந்த் கிஷோர் இணைய போகிறார், எதிர்க்கட்சி கூட்டணிக்கான ஆலோசனை இதில் நடத்தப்பட்டது என்று இந்த மீட்டிங்கிற்கு பின் செய்திகள் வந்தன. அதோடு காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்பட்டது.

எப்படி
மேலும் தேசிய அளவிலான எதிர்க்கட்சி கூட்டணி, திரிணாமுல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி குறித்தும் இதில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வந்தன. பிரஷாந்த் கிஷோரின் இந்த தொடர் சந்திப்புகள் அரசியல் களத்தில் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில் தற்போது மம்தா பானர்ஜி சோனியா காந்தியை சந்திக்க முடிவு செய்துள்ளார்.

சந்திப்பு
மம்தா பானர்ஜி வரும் ஜூலை 25ம் தேதி டெல்லி செல்கிறார். அங்கு 4 நாட்கள் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்திக்கிறார். 2024 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சி கூட்டணியில் மம்தா பானர்ஜி பெரிய அங்கம் வகிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் இதில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்த், ஷரத் பவார், சமாஜ் வாதியின் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை மம்தா சந்திக்க இருப்பதாக தெரிகிறது.

கூட்டணி
தேசிய அளவிலான மிகப்பெரிய கூட்டணி குறித்து இதில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. வேறு சில கட்சித் தலைவர்களையும், தென்னிந்திய அரசியல் பிரமுகர்களையும் மம்தா சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. டெல்லியில் சுற்றி வரும் பிரஷாந்த் கிஷோருடன் மமதா பானர்ஜி சந்திப்பு நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications