ரெடியா? 2023ல் சட்டசபை தேர்தலை சந்திக்கும் 9 மாநிலங்கள்.. பாஜகவுக்கு ‛டப்’ கொடுக்கும் ‛கை’..எப்படி?
டெல்லி: 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளை பாஜக, காங்கிரஸ் உள்பட பிற அனைத்து கட்சிகளும் தற்போது துவங்கி உள்ளன. இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக 2023ல் 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஆண்டு நடக்கும் 9 மாநிலங்களின் தேர்தல்கள் என்பது நாடாளுமன்ற தேர்தலுக்கான செமி பைனலாக கருதப்படும் நிலையில் களநிலவரங்களில் பார்த்தால் பாஜகவுக்கு, காங்கிரஸ் கட்சி ‛டப்' கொடுக்கும் வகையில் உள்ளது.
2022ம் ஆண்டு முடிவடைந்து இன்று 2023ம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ளது. ஆண்டுகள் மாறினாலும் கூட நாட்டில் தேர்தல் பரபரப்புக்கு இந்த ஆண்டும் தயாராகவே உள்ளது. சொல்லப்போனால் கடந்த ஆண்டை காட்டிலும் 2023ம் ஆண்டில் அதிக மாநிலங்கள் தேர்தலை சந்திக்க உள்ளன.
கடந்த 2022ன் துவக்கத்தில் உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, என 5 மாநில தேர்தல் நடந்தது. அதன்பிறகு இமாச்சல பிரதேசம், குஜராத் தேர்தல்கள் அரங்கேறின. மொத்தம் 7 மாநிலங்கள் தேர்தலை சந்தித்தன. இதில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மியும், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடித்தது. பிற 5 மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.

9 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்
இந்நிலையில் தான் இன்று பிறந்துள்ள 2023ம் ஆண்டில் மொத்தம் 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, மிசோராம் ஆகிய 4 வடகிழக்கு மாநிலங்களுடன் கர்நாடகா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக இது கருதப்படுகிறது. இந்த 9 மாநிலங்களில் நடக்கும் ஆட்சிகள் என்ன? மொத்த தொகுதிகள் என்ன?, அங்குள்ள களநிலவரங்கள் என்ன என்பது பற்றிய விபரங்கள் வருமாறு:

4 வடகிழக்கு மாநிலங்கள்
இதில் மேகாலயா, நாகலாந்து, திரிபுரா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு ஒன்றாக தேர்தல் அறிவிக்கப்படலாம். இந்த 3 மாநிலங்களிலும் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலங்களில் ஆட்சியமைக்க ஒரு கட்சி 31 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். இந்த 3 மாநிலங்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடத்தப்படாலம். இதுதவிர இன்னொரு வடகிழக்கு மாநிலமான மிசோராமுக்கு ஆண்டின் இறுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது

மேகாலயா நிலவரம் என்ன?
மாநிலங்கள் வாரியாக பார்த்தால் மேகாலயாவில் பாஜக அங்கம் வகிக்கும் மேகாலயா ஜனநாயக கட்சிகள் எனும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கான்ராட் சங்மா முதலமைச்சராக உள்ளார். இந்த கூட்டணிக்கு மொத்தம் 44 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிகபட்சமாக என்பிபி கட்சிக்கு 21 எம்எல்ஏக்கள் உள்ளன. பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளன. எதிர்க்கட்சியாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சிக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

திரிபுரா, நாகலாந்து நிலவரம் என்ன?
அடுத்ததாக திரிபுராவில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தற்போது மாணிக் சாகா முதல்வராக உள்ளார்.அதேபோல் நாகலாந்தில் என்பிஎப் கட்சியின் தலைமையில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு என்பிஎப் கட்சிக்கு 26 எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்கள் உள்ளன. நைபியு ரியோ முதலமைச்சராக உள்ளார்.

கர்நாடகா நிலவரம் என்ன?
இதற்கு அடுத்தப்படியாக மே மாதம் கர்நாடகா மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெறலாம். தற்போது அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தபோது யாருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவர் ராஜினாமா செய்தார். இதைடுத்து காங்கிரஸ் ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்தது. முதல்வராக ஜனதாதளம் (எஸ்) கட்சியின் குமாரசாமி செயல்பட்டார். இந்த கூட்டணி ஆட்சியில் இருந்து 18 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவிய நிலையில் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக ஆட்சி வந்த நிலையில் எடியூரப்பா முதல்வராக பிறகு அவர் தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் தற்போது பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை. தற்போது பாஜக கூட்டணிக்கு 120 பேர், காங்கிரஸ் கட்சிக்கு 72 பேர், ஜனதாதளம் கட்சிக்கு 30 பேர் உள்ளனர். பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கூறி வரும் நிலையில் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவலாம். மேலும் ஆம்ஆத்மியும் வரும் தேர்தலில் களம் காணலாம். தென்இந்தியாவில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள மாநிலம் கர்நாடகா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேச நிலவரம் என்ன?
மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். இங்கு மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பாஜகவுக்கு 130 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சிக்கு 96 எம்எல்ஏக்கள், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒருவர், மற்றவர்கள் 3 பேர் என உள்ளனர். இந்த மாநிலத்தில் எப்போதும் பாஜக, காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவும். இந்த முறையும் ஆளும் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் சவால் அளிக்கும் வகையில் உள்ளது என்பதால் வரும் சட்டசபை தேர்தல் என்பது பாஜகவுக்கு அக்னிபரீட்சையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த மாநிலத்துக்கு நவம்பரில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

சத்தீஸ்கர் நிலவரம் என்ன?
சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். இங்கு தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 71 எம்எல்ஏக்கள் உள்ளன. பாஜகவுக்கு 14 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளன. 2023 நவம்பரில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இங்கும் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. இங்கு நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

மிசோராம் நிலவரம் என்ன?
மேலும் மிசோராம் மாநிலத்தை பொறுத்தமட்டில் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 21 இடங்கள் தேவை. இங்கு எம்என்எப் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. எம்என்எப் கட்சியை சேர்ந்த ஜோரம்தாங்கா முதல்வராக உள்ளார். இங்கு எம்என்எப் கட்சிக்கு 28 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ மட்டுமே உள்ளன. இங்கு வரும் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா நிலவரம் என்ன?
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். இவர் பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் தேசிய அரசியலுக்காக கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ரிய சமிதி என மாற்றியுள்ளார். இங்கு நவம்பர் அல்லது டிசம்பரில் தேர்தல் நடைபெறலாம். இங்கு மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 60 இடங்கள் தேவை. கடந்த தேர்தலில் சந்திரசேகரராவ் கட்சி 104 இடங்களிலும், ஓவைசி கட்சி 7 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், மற்றவர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். சந்திரசேகரராவ் இடையேயான மோதலுக்கு நடுவே பாஜக தனது செல்வாக்கை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் நிலவரம் என்ன?
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியமைக்க 101 எம்எல்ஏக்களின் ஆதவு வேண்டும். தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 71 எம்எல்ஏக்கள் உள்ளன. இங்கு முதல்வர் பதவி விவகாரத்தில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே மோதல் போக்கு உள்ளது. இது வரும் தேர்தலிலும் எதிரொலிக்கலாம் என கூறப்படும் நிலையில் இது பாஜகவுக்கு சாதகமாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்த மாநிலத்துக்கு 2023 டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

‛டப்’ கொடுக்கும் காங்கிரஸ்
இந்த 9 மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மிசோராமில் ஆளும் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. மேலும் மத்திய பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மத்திய பிரதேச, கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் கங்கணம் கட்டிக்கொண்டு பணியாற்றி வருகின்றனர். மாறாக திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய சிறிய மாநிலங்களில் மட்டுமே பாஜக மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சிகள் நடக்கின்றன. தெலங்கானாவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் நிலைமை மோசமாக உள்ள நிலையில் அங்கு தெலங்கானா சந்திரசேகர ராவ் கட்சியின் ஆட்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 2023ம் ஆண்டில் நடக்கும் 9 மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் சரியான வகையில் ‛டப்' கொடுக்கும் எனவும், நிச்சயம் 2023ம் ஆண்டு பாஜக எதிர்கொள்ளும் தேர்தல் அக்னி பரீட்சையாக இருக்கும் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ்












Click it and Unblock the Notifications