‛நமோ ஹாட்ரிக்’.. நாடாளுமன்றத்தில் காவி டீசர்ட்டில் கவனம் ஈர்த்த அனுராக் தாகூர்! வாசகத்தை பாருங்க
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளாக இன்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அணிந்து வந்த காவிநிற டீசர்ட்டும், அதில் எழுதப்பட்டு இருந்த ‛நமோ ஹாட்ரிக்' வாசகமும் அனைவரின் கவனத்தையும் ஏற்படுத்தி பேசும்பொருளானது.
பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரைவில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் அனுராக் தாகூர். தற்போதைய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று அதில் பங்கேற்க அனுராக் தாகூர் வந்தார்.

அப்போது அவர் அணிந்து வந்திருந்த டீசர்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது அவர் காவி நிறத்தில் டீசர்ட் அணிந்து இருந்ததோடு அதில் எழுதப்பட்டு இருந்த வாசகம் முக்கியத்துவம் பெற்றது.
அதாவது அனுராக் தாகூர் அணிந்திருந்த காவி நிற ஹுடி வகை டீசர்ட்டில் ‛நமோ ஹாட்ரிக்' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. ‛நமோ' என்பது நரேந்திர மோடியின் சுருக்கம் என்பதாகும். இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என்பதை உணர்த்தும் வகையில் அவர் அந்த டீசர்ட் அணிந்துள்ளார்.
இதுபற்றி அனுராக் தாகூரிடம் கேட்டபோது, ‛‛பிரதமர் மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 3வது வெற்றியை எதிர்நோக்கி பயணிக்கிறார். அதோடு பொருளாதாரத்தில் இந்தியாவை 3வது வளர்ந்த நாடாக உயர்த்தும் நோக்கில் அவர் செயல்பட உள்ளார். இதனால் ‛நமோ ஹாட்ரிக்' டீசர்ட் அணிந்துள்ளேன்.
நிச்சயம் பிரதமர் மோடி இந்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவார். இந்த வெற்றி என்பது கடந்த 10 ஆண்டுகளுகளாக ஏழைகளுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கானதாக இருக்கும். அதோடு பிரதமர் மோடியை 3வது முறையாக வெற்றி பெற வைக்க வேண்டும் என மக்கள் மனதில் நினைத்துவிட்டனர். இதனால் அவரது வெற்றி என்பது உறுதியாகும். '' என தெரிவித்தார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் பெற்ற வெற்றியை விட மாபெரும் வெற்றி பெற பாஜகவினர் வியூகம் வகுத்து வருகின்றனர். இந்த முறை 400 தொகுதிகள் வரை வெல்லும் முனைப்பில் பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ‛நமோ ஹாட்ரிக்' என்ற வாசகம் எழுதப்பட்ட டீசர்ட்டை அணிந்து வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications