பாகிஸ்தான் கராச்சியில் இதே மாதிரிதான்.. 2020ல் நடந்த விமான விபத்து நினைவிருக்குதா?
அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து இன்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 50 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று நடைபெற்ற விமான விபத்து கராச்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்து பற்றி இங்கு பார்க்கலாம்.
குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து இன்று பிற்பகல் இங்கிலாந்தின் லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கியது. விமானம் கீழே விழுந்ததும் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயானது வானம் அளவுக்கு உயர்ந்து தீப்பிடித்தது. மேலும் அப்பகுதி முழுவதும் கரும்புகை எழுந்தது.

குடியிருப்பு பகுதியில் இந்த விமானம் விழுந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் 2 விமானிகள் மற்றும் 10 ஊழியர்கள் மற்றும் பயணிகள் 230 பேர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 242 பேரின் நிலைமை என்ன என்று தெரியவில்லை. முன்னதாக விமானம் விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன.
விமானம் 475 அடி உயரத்தில் இருந்து விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புறப்பட்ட உடனே விமானம் விபத்துக்குள்ளானதால், அதிகளவு எரிபொருள் இருந்ததால் இப்படி பெரிய அளவில் வெடித்து சிதறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மே டே கால் அழைப்பு வந்துள்ளது. ஆனால், பதிலுக்கு தொடர்பு கொள்ள முயற்சிக்கும் முன்பாக இந்த விபத்து நேரிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல ஏதுவாக கிரீன் காரிடார் வசதி செய்யப்பட்டுள்ளது. தேசிய மீட்பு படையினர் அகமதாபாத் விரைந்துள்ளனர்.
இதுவரை இந்த விமான விபத்தில், 50 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
குஜராத்தின் அகதாபாத்தில் இன்று நடைபெற்ற விமான விபத்து கராச்சியில் கடந்த
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. பாகிஸ்தனின் கராச்சி நகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்து குறித்த விவரம் வருமாறு:-
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி நகரில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் 99 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் தரையிறங்க தயாரான போது விமான நிலையத்திற்கு அருகில் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில், 99 பயணிகள் உள்பட 101 பேர் பலியாகினர். இந்த விபத்திற்கு மனித தவறே காரணம் என கண்டறியப்பட்டது. விமானிகள் லேண்டிங் செய்யும் இடத்தை சரியாக கணிக்காததே விபத்திற்கு காரணமாக அமைந்தது.












Click it and Unblock the Notifications