நான் இவ்வளவு தூரம் வந்ததே பெரிசுங்க! கோபத்தை கட்டுப்படுத்தி சிரித்த எடப்பாடி பழனிசாமி!
டெல்லி: சாதாரண குடும்பத்திலிருந்து வந்த தாம் இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்றிரவு டெல்லியில் சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடபாடி பழனிசாமி, தமிழ்நாடு இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவர், உங்கள் தலைமையில் அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது, அப்படியென்றால் உங்கள் தலைமையை மக்கள் விரும்பவில்லை என்று தானே அர்த்தம் எனக் கொக்கியை போட்டார்.

முதலில் சுர்ரென டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமி, ஒரே நொடியில் கூலாக மாறி தனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்தி சிரித்துக் கொண்டே அந்தக் கேள்வியை எதிர்க்கொண்டார்.
நான் சாதாரண குடும்பத்திலிருந்து வந்து, இந்தளவுக்கு வந்திருப்பதே பெரிய விஷயம் என்றும் தாம் முதல்வராக பொறுப்பேற்ற போது ஃபுளோர் டெஸ்ட் மூலம் ஆட்சியை கவிழ்க்க எத்தனையோ சதி நடந்தும் அனைத்தையும் முறியடித்து ஆட்சி நடத்தினேன் எனவும் எடப்பாடி தெரிவித்தார்.
அதேபோல் கட்சியை உடைக்க எத்தனையோ பேர் சதி செய்தும் அதையும் கட்டிக் காப்பாற்றி வருவதாக கூறினார். தனது தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியில் திமுக பல்வேறு குடைச்சல்கள் கொடுத்தும் அதை எதிர்க்கொண்டு சிறப்பான ஆட்சியை வழங்கியதாக கூறினார்.

இதனால் தன்னைப் பொறுத்தவரை தாம் இவ்வளவு தூரம் வந்ததே பெரிது என தன்னைப் பற்றி தாமே ஆச்சரியப்பட்டுக் கொண்டார். ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அவர் திமுகவின் பி டீம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.
கட்சிக்கு விசுவாசமிக்கவர்கள் யாராக இருந்தாலும் அதிமுகவுக்கு வரலாம் என்றும் ஆனால் கட்சிக்கு துரோகம் நினைத்தவர்கள் எந்தக் காலத்திலும் திரும்பவும் வர முடியாது எனவும் எடப்பாடிபழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரின் பெயர்களை குறிப்பிடாமல் அவர் இவ்வாறு சூசகமாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
