ஏர் இந்தியா விபத்து.. பராமரிப்பு குறைபாடு காரணமா? திடீரென சிஇஓவிடம் இருந்து பறந்த லெட்டர்! முக்கியம்
டெல்லி: ஏர் இந்தியா விபத்து தொடர்பான முதற்கட்ட ஆய்வறிக்கை சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் எரிபொருள் சுவிட்ச் ஆஃப் நிலையில் இருந்தது குறித்துக் கூறப்பட்டு இருந்தது. அந்த ரிப்போர்ட் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், இது தொடர்பாக ஏர் இந்தியா சிஇஓ கேம்பல் வில்சன் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு முக்கியமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த ஜூன் 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஒரே ஒரு பயணியைத் தவிர அனைவரும் உயிரிழந்துவிட்டனர். விமானம் விடுதி ஒன்றில் மோதியதில் அங்கும் சிலர் உயிரிழந்துவிட்டனர். இந்தியாவில் நடந்த மோசமான விமான விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

முதற்கட்ட ஆய்வு முடிவுகள்
இந்த விபத்து தொடர்பாக ஏஏஐபி எனப்படும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து இருந்தது. அதில் விமான சுவிட்ச் அணைக்கப்பட்டு இருந்தது குறித்து மட்டுமே கூறப்பட்டு இருந்தது. போயிங் அல்லது ஏர் இந்தியா நிறுவனத்திற்கு எந்தவொரு அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே ஏர் இந்தியா சிஇஓ கேம்பல் வில்சன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது ஏஏஐபி முதற்கட்ட அறிக்கையில் தங்களுக்கு எந்தவொரு பரிந்துரையும் வழங்கப்படவில்லை என்றும் இந்த விவகாரத்தில் முன்முடிவுகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார். விமானம் அல்லது எஞ்சினில் அல்லது அதன் பராமரிப்பில் சிக்கல்களும் கண்டறியப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.
கேம்பல் வில்சன் கடிதம்
இது தொடர்பாக கேம்பல் வில்சன் தனது ஊழியர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அந்த விபத்தை எப்போதும் நடக்கவே கூடாத ஒரு சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், "முதற்கட்ட அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் என்ன நடந்தது என்பது பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கை தெளிவை வழங்கிய அதேநேரம் சில கூடுதல் கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.
பராமரிப்பு சிக்கல் இல்லை
இது ஊடகங்களில் புதிய ஊகத்தையும் தூண்டி இருக்கிறது.. இதுபோன்ற ஊகங்களுக்குக் கவனம் செலுத்தத் தேவையில்லை.. முதற்கட்ட அறிக்கையில் விமானச் சிக்கல் அல்லது மெகானிக்கல் சிக்கல் அல்லது பராமரிப்பு குறைபாடுகள் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது. அனைத்து பராமரிப்புப் பணிகளும் முடிக்கப்பட்டே இருந்தது. எரிபொருளின் தரத்திலும் எந்தப் பிரச்சினையும் இல்லை, புறப்படும்போதும் எந்த அசாதாரணச் சூழலும் இல்லை. விமானிகள் விமானத்திற்கு முந்தைய கட்டாய ஆல்கஹால் சோதனையிலும் தேர்ச்சி பெற்றனர். அவர்களின் மருத்துவ ரீதியாகவும் பிட்டாகவே இருந்துள்ளனர்" என்று கூறியிருக்கிறார்.
மிகுந்த எச்சரிக்கையுடன் பரிசோதனை
மேலும், அவர் ஏர் இந்தியா வசம் இருக்கும் ஒவ்வொரு போயிங் 787 விமானமும் விபத்திற்குப் பிறகு மிகுந்த எச்சரிக்கையுடன் பரிசோதிக்கப்பட்டது என்றும் அவை அனைத்தும் பறக்கத் தகுதியான நிலையிலேயே இருப்பதாகவும் அவர் கூறினார். அதிகாரிகள் சொல்லும் புதிய சோதனைகள் உட்படத் தேவையான அனைத்துச் சோதனைகளையும் தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வில்சன் திட்டவட்டம்
முதற்கட்ட அறிக்கையில் எந்தவொரு காரணமும் கண்டறியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய வில்சன், "விசாரணை இன்னும் முடிவடையாததால் அனைவரும் முன்முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். முழுமையான மற்றும் விரிவான விசாரணையை நடத்தத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம். அதேநேரம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை அல்லது காரணம் கண்டறியப்படும் வரை புதிய ஊகங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனாலும், நாம் நமது பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்
கடந்த மூன்று ஆண்டுகளில் ஏர் இந்தியாவின் புதிய பயணத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உறுதுணையாக இருப்பதும், ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவதும், பயணிகளுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதுமே நமது முன்னுரிமைகள்" என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications