அக்ஷய திருதியை நாளில் தங்கம்.. இந்த 5 பாயிண்டுகளை மறக்காதீங்க.! கடைசி பாயிண்டு ரொம்ப முக்கியம்
டெல்லி: இந்த வாரம் அட்சய திருதியை வரும் நிலையில், அன்று தங்கம் வாங்கும் முன்பு நாம் எந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
வெளிநாடுகளை விட இந்தியாவில் தங்கச் சேமிப்பு ரொம்பவே முக்கியமானது.. தங்கம் என்பது எப்போதும் செல்வத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இது தவிர நமது விஷேசங்களிலும் தங்கத்தின் பங்கு முக்கியமானது. இதனால் இந்தியர்களுக்குத் தங்கம் வாங்குவதில் அதீத ஆர்வம் எப்போதும் இருக்கிறது.

அட்சய திருதியை: அதிலும் குறிப்பாக அட்சய திருதியை நாளன்று தங்கம் வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்தாண்டு மே 10ஆம் தேதி அக்ஷய திருதியை வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், தங்கம் வாங்கும் முன்பு சில முக்கிய விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.. அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கேரட்: முதலில் அடிப்படை என்றால் அது தங்கத்தின் தூய்மையைப் புரிந்துகொள்வது தான். நமது நாட்டில் தூய்மையான தங்கம் என்றால் அது 24 கேரட் தங்கம் தான்.. குறிப்பாகத் தங்கத்தை நகைகளாக வாங்கும் போது எந்தளவுக்கு அது தூய்மையானது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். பொதுவாகத் தங்க காயின் மட்டுமே 24 கேரட்டில் இருக்கும். தங்க நகைகள் என்றால் அவை 22 கேரட்டாகவே இருக்கும். அதில் 91.6% தங்கம் இருக்கும். முன்பு 18 கேரட் தங்கமும் கூட புழக்கத்தில் இருந்தது. ஆனால், அவை பெருமளவு குறைந்துவிட்டது.
ஆனாலும், சிறு சிறு கடைகளில் வாங்கும் போது 22 கேரட் தங்கத்தைத் தான் தருகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உரியச் சான்றிதழ் வைத்துள்ள நகைக்கடைகளில் நகை வாங்குங்கள். பெரிய கடைகளில் எத்தனை கேரட் தங்கம் என்பதை அளவிடவே தனியாகக் கருவியை வைத்திருப்பார்கள்.. இதன் மூலம் நீங்கள் தரமான தங்கத்தைத் தான் வாங்குகிறீர்கள் என்பதை உறுதி செய்ய முடியும்.
மேக்கிங் சார்ஜ்: அடுத்து மேக்கிங் சார்ஜ்களை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மேக்கிங் சார்ஜ் என்பது தங்கத்தை நகைகளாக வடிவமைப்பதில் ஏற்படும் செலவுகள் ஆகும். இது ஒவ்வொரு கடைக்கும் மாறுபடும். எனவே பல கடைகளில் விலையை ஒப்பிட்டுப் பார்த்து எங்கு மேக்கிங் சார்ஜ் குறைவாக இருக்கிறதோ அங்குத் தங்கத்தை வாங்குங்கள்.
ஹால்மார்க் முத்திரை: மூன்றாவதாக ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.. இது தங்கத்தின் தூய்மை மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்ய உதவுகிறது. எனவே, நீங்கள் வாங்கும் தங்கத்தில் ஹால்மார்க்கிங் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வரும் காலத்தில் ஹால்மார்க் இருந்தால் மட்டுமே அதை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும்.
எடை: அடுத்து நான்காவது எடை சார்ந்தது. இதை ஆங்கிலத்தில் positive weight tolerance என்பார்கள். அதாவது நீங்கள் கொடுக்கும் பணத்தைக் காட்டிலும் கூடுதல் தங்கம் உங்களுக்குக் கிடைக்க வேண்டும். கூடுதல் தங்கம் என்றால் 5, 10 கிராம் எல்லாம் இல்லை. 0.005 போல மில்லிகிராம் கணக்கில் கூடுதலாகக் கிடைக்க வேண்டும். அதாவது தங்கத்தின் எடை 4.115 என்றால் 4.11 கிராமிற்கு விலையை நிர்ணயம் செய்திருக்க வேண்டும். 4.2க்கு மதிப்பிட்டால் அந்த கடையைத் தவிர்க்கலாம்.
முக்கிய பாயிண்டு: ஐந்தாவது பாயிண்டு.. என்ன தான் தங்கமாக இருந்தாலும் பட்ஜெட் போட்டு வாங்குங்கள். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது மங்களகரமானது என்றாலும் அளவாகச் செலவிடுங்கள். அதிக விலைக்கு வாங்க வேண்டாம். இந்த 5 பாயிண்டுகளை பின்பற்றி தங்கம் வாங்கினால் இந்த அட்சய திருதியை உங்களுக்கு மங்களகரமான ஆண்டாக இருக்கும்.












Click it and Unblock the Notifications