நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம்? அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பரபர! திமுக வைத்த கோரிக்கை என்ன
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், அதற்கு முன்னதாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு கட்சிகளும் தங்கள் கருத்துகளை முன்வைத்த நிலையில், மணிப்பூர் மற்றும் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
நமது நாட்டின் விதியின்படி குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்த நிலையில், இப்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

நாளை நவ. 25ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அது தொடர்பாக ஆலோசிக்க இன்று (நவ.24) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
ஆலோசனைக் கூட்டம்: அதன்படி இன்றைய தினம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதான கூட்ட அரங்கில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது இந்த கூட்டத் தொடரைச் சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதேபோல இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன. மணிப்பூர் பிரச்சினை, வட இந்தியா காற்று மாசு, இந்தியாவில் அதிகரிக்கும் ரயில் விபத்துகள் குறித்து இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதானி: குறிப்பாகத் தொழிலதிபர் அதானி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டி வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
திமுக: திமுக சார்பில் டி. ஆர் பாலு மற்றும் திருச்சி சிவா இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சாதிவாரியான கணக்கெடுப்பு, நிலுவையில் உள்ள தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா, மத்திய மாநில அரசுகளின் உறவு, தமிழ்நாடு மீனவர் பிரச்சினை, மதுரை எய்மஸ் கட்டுமானம் குறித்தெல்லாம் ஆலோசிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மத்திய அரசு திட்டம்: மேலும் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு பல முக்கிய மசோதாக்களைக் கொண்டு வரும் எனத் தெரிகிறது. குறிப்பாக வக்பு வாரிய திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு இருந்த நிலையில், இதை இந்த முறை நிறைவேற்ற அரசு முயலும் எனத் தெரிகிறது. அதேபோல "ஒரே நாடு ஒரே தேர்தல்" மசோதாவையும் மத்திய அரசு இந்த முறை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு முனைப்புக் காட்டும் நிலையில், எதிர்க்கட்சிகளும் பல முக்கிய பிரச்சினைகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்கா அதிகாரிகள் அதானி மீது லஞ்ச புகார் வைத்துள்ள நிலையில், அவை இந்த முறை பேசுபொருளாகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications