குறுவை சாகுபடி பயனாளிகள் கவனத்திற்கு! ரூ.4000 அரசு மானியம் யாருக்கு? தேவையான முக்கிய ஆவணங்கள் விவரம்
சென்னை: நெல் விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. நடப்பு குறுவை பருவத்தில், இயந்திரம் மூலம் நெல் நடவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4,000 ரூபாய் வரை மானியம் வழங்க வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் குறுவை சாகுபடிக்காகச் செலவு செய்து வந்த விவசாயிகளுக்கு ஓரளவுக்குப் பொருளாதார நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது தஞ்சாவூரில் அதற்கான அறிவிப்பு வந்துள்ளது.. அதை இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டாரத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், இயந்திரம் மூலம் நெல் நடவு செய்த விவசாயிகளுக்கு இந்த மானிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நெல் விவசாயிகளுக்கு மானியம்
அதன்படி, பூதலூர் வட்டாரத்தில் இயந்திரம் மூலம் நெல் நட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4,000 ரூபாய் வீதம் மானியத் தொகை வழங்கப்படும். மொத்தம் 3,000 ஏக்கர் பரப்பளவிற்கு இந்த மானியம் வழங்கப்பட உள்ளது. இதில் 2,700 ஏக்கர் பொதுப் பிரிவினருக்கும், 300 ஏக்கர் ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், நெற்பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து அதிக மகசூல் தருவதற்காக நெல் நுண்ணூட்ட உரக்கலவையும் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இதற்காக ஒரு ஏக்கருக்கு 147 ரூபாய் அல்லது 50 சதவீத மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.4000 அரசு மானியம்
இந்த உர மானியம், 1,000 ஏக்கர் பரப்பளவிற்கு வழங்கப்பட உள்ளது. இதில் பொதுப் பிரிவுக்கு 700 ஏக்கரும், ஆதிதிராவிடர் பிரிவுக்கு 300 ஏக்கரும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 18 வயது பூர்த்தியடைந்த பூதலூர் வட்டாரத்தைச் சேர்ந்த நெல் விவசாயிகள் அனைவரும் பலன் பெற முடியும். அதே நேரத்தில், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஏக்கர் நிலத்திற்கு மட்டுமே இந்த மானியம் கிடைக்கும் என்ற விதியும் இதில் உள்ளது.
இந்த மானியத் தொகையையும், உரச் சலுகையையும் பெற விரும்பும் விவசாயிகள், இதற்காக எங்கும் அலைந்து திரியத் தேவையில்லை. தங்களின் மொபைலில் உள்ள 'உழவன் செயலி' மூலமாகவே இதற்கான முன்பதிவைச் செய்து கொள்ளலாம்.
பயனாளிகள் - ஆவணங்கள் என்னென்ன
பயனாளிகள் இதற்காக விண்ணப்பிக்கும்போது தங்களின் ஆதார் எண், இயந்திர நடவு செய்ததற்கான ரசீது, கணினி சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி கணக்குப் புத்தக நகல் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக, தங்களது வயலில் இயந்திரம் மூலம் நடவு செய்தபோது எடுத்த போட்டோக்களையும் இதில் இணைக்க வேண்டும்.
இவைகளை உழவன் செயலியில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பிறகு, அந்த ஆவணங்களின் நகல்களை தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் விவசாயிகள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
இந்த ஆவணங்களை அதிகாரிகள் கள ஆய்வு செய்து உறுதி செய்வார்கள்.. அதற்கு பிறகு, மானியத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இது குறித்த கூடுதல் விபரங்களை அறிய விரும்பும் விவசாயிகள், தங்களது பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அல்லது உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்...!!!












Click it and Unblock the Notifications