இதெல்லாம் ரொம்ப தப்பு! பாஜகவினருக்கு தேசபக்தி பாடமெடுத்த காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர்? என்ன நடந்தது?
டெல்லி: காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை பொதுவெளியில் இலவசமாக திரையிட இருப்பதாக விளம்பரம் செய்த பாஜக பிரமுகருக்கு அப்படத்தின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கடந்த வாரம் நாடு முழுவதும் வெளியானது.
விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, முன்னணி நடிகர் அனுபம் கேர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் இந்த படம்தான் தற்போது தேசிய அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பிரதமர் மோடி பாராட்டு
80 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஜம்மு காஷ்மீர் வன்முறை சமயத்தில் அங்கிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதாக இந்த படத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை அண்மையில் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியையும் படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் சலுகை
இந்த படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், கோவா, திரிபுரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா, குஜராத், உத்தராகண்டில் வரி விலக்கு அளிக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் இந்த படத்தை பார்க்க செல்லும் போலீசாருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டது. அதே போல் மற்ற சில மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்ப்பதற்காக விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் எதிர்ப்பு
இந்த படம் குறித்து கேரள மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில், "காஷ்மீர் தாக்குதல்களின்போது பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் அப்போது ஆளுநராக இருந்த பாஜக - ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஜக்மோகன் அவர்களை காஷ்மீரை விட்டு வெளியேற சொன்னார்." எனக் குற்றம்சாட்டியது. அதே போல் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

அரசியலால் வசூல் வேட்டை
முதல் 4 நாட்கள் மிகக் குறைவான அளவிலேயே வசூல் செய்த காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பாஜக ஆளும் மாநிலங்களின் வரிவிலக்கு, விடுமுறை அறிவிப்பு காரணமாகவும், அதில் இடம்பெற்ற காட்சிகளுக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களாலும் அடுத்தடுத்த நாட்களில் அதிகளவிலான திரையரங்குகளில் காட்சிபடுத்தப்பட்டு வசூலை வாரிக்குவித்து வருகிறது. இதுவரை அந்த படம் ரூ.141 கோடி வசூலித்து இருக்கிறது.

அரியானா பாஜக பிரமுகரின் செயல்
இதனிடையே அரியானா மாநில பாஜக பிரமுகர் ஒரு தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை பொதுவெளியில் திரையிட இருப்பதாகவும் யார் வேண்டுமானாலும் இலவசமாக படத்தை பார்க்கலாம் என்றும் அறிவித்தார். இன்று மாலை 6:30 மணிக்கு படம் திரையிட இருப்பதாகவும் அவர் விளம்பரம் செய்தது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இது திரைப்படத்தை இயக்கிய விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் கவனத்துக்கும் சென்றுள்ளது.
|
இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கொதிப்பு
அந்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். "காஷ்மீர் பைல்ஸை இதுபோல் பொதுவெளியில் திரையிடுவது குற்றச்செயல். அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் இந்த திரையிடலை தடுத்து நிறுத்த வேண்டும். அரசியல் தலைவர்கள் படத்தின் வர்த்தகத்தையும் மதிக்க வேண்டும். சட்டப்படி, அமைதியான முறையில் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பதுதான் உண்மையான தேச பக்தியும் சமூக சேவையுமாகும்." எனக் குறிப்பிட்டு இருக்கிறார். -












Click it and Unblock the Notifications