சினிமா கூட தோத்துடும்! நகை வெறும் ரூ.300தான்.. ஆனா அமெரிக்க பெண்ணை ஏமாற்றி 6 கோடிக்கு விற்ற இந்தியர்
டெல்லி: அமெரிக்கப் பெண் ஒருவர் இந்தியாவில் நகைக் கடை உரிமையாளரிடம் 300 ரூபாய் மதிப்பிலான நகைகளை 6 கோடி ரூபாய்க்கு வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
வெளிநாட்டின் சுற்றிப் பார்க்கா இந்தியா மிகச் சிறந்த ஒரு நாடாகவே இருக்கிறது. விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற இந்தியாவுக்கு வர பல்வேறு நாட்டினரும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், சில நேரங்களில் இதே வெளிநாட்டினரைக் குறிவைத்து சில மோசடி சம்பவங்களும் நடந்து விடுகின்றனர். அப்படியொரு மோசடி சம்பவம் தான் இப்போது ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது.
300 ரூபாய்: அமெரிக்கப் பெண் ஒருவர் 300 ரூபாய் மதிப்பிலான போலி நகைகளை 6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்.. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவரிடம் இருந்து அந்த பெண் இந்த போலி நகைகளை வாங்கி இருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜோஹ்ரி பஜாரில் உள்ள ஒரு கடையில் தான் அமெரிக்கா பெண் இந்த போலி நகைகளை வாங்கி உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த செரிஷ் என்ற பெண் தான் இந்த போலி நகைகளை வாங்கியுள்ளார்.
வெள்ளியால் செய்யப்பட்ட நகைகளுக்குத் தங்க முலாம் பூசி விற்றுள்ளனர். இந்த நகைகளின் மொத்த மதிப்பே வெறும் ரூ.300 தான். ஆனால், அதைத் தங்க நகை என்று சொல்லி இவர்கள் அந்த அமெரிக்கா பெண்ணுக்கு விற்றுள்ளனர்.
போலி நகை: அந்த பெண்ணும் இது உண்மையான நகை என்றே நம்பி வாங்கி இருக்கிறார். அமெரிக்காவிலும் இதைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்துள்ளார். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடந்த கண்காட்சியில் இந்த நகைகளை அவர் காட்சிப்படுத்த முயன்றுள்ளார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நகையைப் பரிசோதனை செய்த போது தான் அது போலி நகை என்பது தெரிய வந்துள்ளது.
இதைக் கேட்டதும் செரிஷுக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றிப் போய்விட்டது. ஆமாம் சுமார் 6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய நகை ஆச்சே.. போலி நகை என்று தெரிந்ததும் செரிஷ் உடனடியாக இந்தியாவிற்கு வந்துள்ளார். இங்கே நேரடியாக ஜெய்ப்பூரில் உள்ள சம்பந்தப்பட்ட நகைக் கடைக்குச் சென்ற செரிஷ் கடை உரிமையாளர் கௌரவ் சோனியிடம் இது தொடர்பாகக் கேட்டுள்ளார்.
புகார்: இருப்பினும், கௌரவ் சோனி இந்தச் சம்பவத்தைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். தான் உண்மையான நகைகளையே அனுப்பியதாக அவர் கூறியிருக்கிறார். இதையடுத்து என்ன செய்வதென்றே புரியாமல் திணறிய செரிஷ் கடைசியில் ஜெய்ப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அவர் அமெரிக்கத் தூதரகத்தின் உதவியையும் நாடி இருக்கிறார். இதையடுத்து இந்த விஷயத்தில் விரைந்து விசாரிக்குமாறு அமெரிக்கத் தூதரகம் ஜெய்ப்பூர் காவல்துறையை வலியுறுத்தியுள்ளது.
எப்படி: கடந்த 2022ஆம் ஆண்டில் தான் செரிஷுக்கு இந்தக் கடைக்காரர் குறித்துத் தெரிய வந்துள்ளது. அவர் இன்ஸ்டாகிராம் மூலம் கௌரவ் சோனியுடன் தொடர்பு கொண்டு இருக்கிறார். அப்போது தான் இந்த தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை உண்மையான நகை என ஏமாற்றி அந்த பெண்ணுக்கு விற்றுள்ளார். இதற்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் ₹ 6 கோடியையும் அவரிடம் வாங்கி இருக்கிறார்.
அந்தப் பெண் இந்தியாவுக்கு வந்து தன்னிடம் கேட்ட உடன் கௌரவ் ஊஷாராகிவிட்டார். இதையடுத்து அவரும் அவரது தந்தை ராஜேந்திர சோனியும் இப்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடி வரும் ஜெய்ப்பூர் போலீசார், இதற்காக இரண்டு தனிப்படைகளையும் அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications