திமுக தலைவர் ஒருவர் இருக்கிறார்.. அவருக்கு தமிழில் கையெழுத்து கூட போட தெரியாது! - அமித்ஷா
டெல்லி: மத்திய அரசு அனைத்து மொழிகளையும் ஒன்றாகத்தான் பார்க்கிறது என்றும், திமுக தலைவர் ஒருவருக்கு தமிழில் கையெழுத்து கூட போட தெரியாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்திருக்கிறார்.
எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்காகவே, தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை திமுக கிளறியுள்ளதாகவும் அமித்ஷா விமர்சித்துள்ளார்.

சிஎன்என் நியூஸ் 18 செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "தமிழகத்தில் திமுக அரசு ஏராளமான ஊழலை செய்திருக்கிறது. இந்த ஊழலை மறைப்பதற்காகவே தொகுதி மறுசீரமைப்பை பிரச்சனையாக திமுக கையில் எடுத்திருக்கிறது. ப்ரோ டேட்டா அடிப்படையில் தொகுதிகள் தக்க வைக்கப்படுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. தென்னிந்திய மக்களுக்கு பாஜக ஒருபோதும் அநீதி இழைக்காது என்று உறுதியாக கூறுகிறேன்.
இந்த விவகாரத்தை தென்மாநில அரசியல்வாதிகள் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறை விவகாரம் பூதாகரமாக வெடிக்க முக்கிய காரணம் 2026 சட்டமன்ற தேர்தல்தான். என்ன இருந்தாலும் அடுத்த தேர்தலில் பாஜக கூட்டணி தமிழகத்தில் நிச்சயம் வெற்றி பெறும். இது ஒருபுறம் எனில் மறுபுறும், மொழிப்பிரச்சனை தீவிரமாக இருக்கிறது. நான் இந்தி பேசுவதாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுகிறேன். நான் ஒரு குஜராத்தி, அனைத்து மொழிகளையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
காங்கிரஸ்தான் இந்தி மற்றும் ஆங்கிலத்தை திணித்தது. ஆனால் பாஜக பிராந்திய மொழிகளில் போட்டி தேர்வுகளை நடத்துகிறோம். உண்மையில் மொழியை பாதுகாக்க யார் பாடுபடுகிறார்கள் என்பது இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். மத்திய அரசு அனைத்து மொழிகளையும் ஒன்றாகத்தான் பார்க்கிறது. இந்தியை மட்டும் ஊக்குவிப்பதாக சொல்வது தவறு. திமுகவில் ஒரு தலைவர் இருக்கிறார். அவருக்கு தமிழில் கையெழுத்து கூட போட தெரியாது.
இப்போது வக்பு சட்ட திருத்தத்திற்கு வருவோம். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், ராகுல் காந்தி மௌனமாக இருந்தார். வயநாடு எம்பி பிரியங்கா காந்தி, அவைக்கே வரவில்லை. வாக்களிக்கவில்லை. உண்மையில் இவர்களுக்கு வக்பு சட்டத்திருத்தம் பிரச்சனை எனில் வாயை திறக்காதது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். பாஜகவின் தலைவரை தேர்ந்தெடுப்பது மற்றும் தேர்தல் கூட்டணி பற்றி பேசுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications