மாஸ்டர்பிளான் 2024.. மிகப்பெரிய திட்டத்தை அறிமுகம் செய்த அமித் ஷா.. அடுத்த 20 வருஷம் என்ன நடக்கும்?
டெல்லியில் உளவுத்துறை ஏற்பாடு செய்திருந்த தேசிய பாதுகாப்புக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது, அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பை எப்படி பலப்படுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
2047-க்குள் இந்தியா ஒரு முழுமையான வல்லரசு நாடாக மாற வேண்டும் என்றால், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மிக பலமாக இருக்க வேண்டும். நாடு அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தால் மட்டுமே பொருளாதாரம் வளரும், மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியா தர்மசாலா அல்ல
எல்லைப் பாதுகாப்பு மற்றும் ஊடுருவல் குறித்துப் பேசிய அமித் ஷா மிகக் காட்டமாக ஒரு விஷயத்தைக் கூறினார், இந்த நாடு ஒன்றும் தர்மசாலா கிடையாது; யார் வேண்டுமானாலும் வந்து தங்கிவிட முடியாது. இந்நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே இங்கு வாழ்வதற்கான உரிமை இருக்கிறது.
சட்டவிரோதமாக எல்லை வழியாக நாட்டுக்குள் நுழைபவர்களால் நாட்டின் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே, எல்லையோர மாநிலங்களுடன் பேசி புதிய பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்கியுள்ளதாகவும், விரைவில் இந்தியாவில் சட்டவிரோத ஊடுருவல் முழுமையாகத் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தீவிரவாத ஒழிப்பு
முந்தைய காலங்களில் காஷ்மீர் பிரச்சனை, நக்சலைட்டுகள் தொல்லை மற்றும் வடகிழக்கு மாநிலக் கலவரங்கள் ஆகியவை ஆரம்பத்திலேயே சரியாகக் கவனிக்கப்படாததால் நாடு பல ஆண்டுகள் கஷ்டப்பட்டது என்று அமித் ஷா கூறினார். ஆனால் இப்போது, மத்திய-மாநில போலீஸ் படைகளின் தீவிர முயற்சியால் அந்த மூன்று பெரிய பிரச்சனைகளும் பெருமளவு முடிவுக்கு வந்துவிட்டன என்றார். பிஎஃப்ஐ போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட்டு ஒடுக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் இல்லாத இந்தியா
நாட்டின் இளைஞர்களைக் காப்பாற்ற போதைப்பொருள் கடத்தலை அடியோடு அழிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர், அதற்காக மூன்று எளிய வழிகளைச் சொன்னார்:
போதைப்பொருள் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிவது
கடத்தல் நெட்வொர்க்குகளை முடக்குவது
போதைப்பொருள் கும்பலை முழுமையாக அழிப்பது
3 ஆண்டுகளில் நீதி கிடைக்கும் புதிய சட்டங்கள்
இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அடுத்த ஓராண்டுக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்றார். இதன் மூலம், எப்பேர்ப்பட்ட குற்ற வழக்காக இருந்தாலும் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்குள் உச்ச நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகும். குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பது 25% அதிகரிக்கும் என்றும் விளக்கினார்.
தொழில்நுட்பமும் எதிர்கால பாதுகாப்பும்
இப்போது குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கம்ப்யூட்டர், செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இந்தியாவில் குற்றம் செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிய 274 முக்கியக் குற்றவாளிகள் 2019 முதல் 2026 வரை இந்தியாவுக்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றார்.
புதிய பாதுகாப்பு திட்டம்
இணையதளப் பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் ஆகியவை எதிர்காலத்தில் பெரிய ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது. பிரச்சனை பெரிதாகும் வரை காத்திருக்காமல், ஆரம்பத்திலேயே அதைத் தடுத்து அழிப்பதே இந்தியாவின் புதிய பாதுகாப்பு திட்டம் என்று அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார்


Click it and Unblock the Notifications
